Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்படிச்சது எம்.பி.ஏ... நடத்துவது டீக்கடை... நம்பிக்கை விதைக்கும் கரூர் இளைஞர்!

படிச்சது எம்.பி.ஏ… நடத்துவது டீக்கடை… நம்பிக்கை விதைக்கும் கரூர் இளைஞர்!

`பெரிய படிப்பு; நல்ல வேலை, கைநிறைய சம்பளம்’ என்பதுதான் இளைய சமுதாயத்தின் எதிர்பார்ப்பு என்பது இப்போது மாறிவருகிறது. `யாருக்கோ கைகட்டி வேலை செய்வதைவிட, சுயமா தொழில் செய்வோம். அது என்ன தொழிலானாலும் பரவாயில்லை’ என்று இன்றைய இளைஞர்களின் மனநிலை மாறியிருக்கிறது. அந்த ரகத்தைச் சேர்ந்தவர்தான், கரூரைச் சேர்ந்த சரவணக்குமார்.

இவர் எம்.பி.ஏ படித்துவிட்டு தனியார் நிதி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தவர், அதை உதறித் தள்ளிவிட்டு இப்போது கரூர் காந்திகிராமத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம். தனது வாழ்க்கைப் பயணத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை விவரித்தார்.

சரவணக்குமார்

“எனக்கு சொந்த ஊர், கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டி. அப்பா வீரபத்திரன், அம்மா தனபாக்கியம், இரண்டு அக்கா என அழகான குடும்பம். விவசாயம்தான் பூர்வீகத் தொழில். ஆனா, பெரிய அளவில் நிலமெல்லாம் இல்லை. நானும் 10-ம் வகுப்பு படிக்கிற வரைக்கும் ஆவரேஜ் ஸ்டூடன்ட்தான். தரகம்பட்டி அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படிச்சேன். விளையாட்டுப் பிள்ளையா சுத்திக்கிட்டு இருப்பேன். அதனால், பத்தாம் வகுப்புல 290 மார்க்தான் வாங்க முடிஞ்சது. வீட்டுல கண்டிச்சாங்க. அதோட, டி.உடையாபட்டியில உள்ள ஓர் அரசு உதவிபெறும் பள்ளியில் பதினோறாம் வகுப்பு சேர்த்தாங்க. அந்தப் பள்ளிக்கு ஆஸ்திரேலியாவுல இருந்து எம்.பி.ஏ ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் வருவாங்க. அவங்களோடு நாங்க இன்ட்ராக்ட் பண்ணுவோம். அதனால், எம்.பி.ஏ படிப்பு மேல ஓர் ஈர்ப்பு வந்துச்சு. அதன் காரணமாக, படிப்பு மேல ஆர்வம் வந்து, பன்னிரண்டாம் வகுப்புல 1090 மார்க் வாங்கினேன்.

அதன் பிறகு, நாமக்கல் மாவட்டத்துல உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ சேர முடிவெடுத்தேன். ஆனா, வீட்டுல அங்க ஃபீஸ் கட்டுற அளவுக்கு வசதியில்லை. அதனால், மனம் ஒடிஞ்சு நின்னப்ப, என்னோட அம்மாச்சி, தாத்தா, மாமானு மூணு பேரும், பணம் கொடுத்து, 2009-ம் வருஷம் கல்லூரியில் சேர்த்தாங்க. திடீர்னு கல்லூரி காலத்துல, `டீச்சிங் லைனில்தான் வேலைக்குப் போகணும்’னு தோணுச்சு. அதற்கு பயிற்சியா, வீட்டுல மூணு வருஷம் தொடர்ந்து டியூஷன் எடுத்தேன். இந்த நிலையில், பி.பி.ஏ-வை 82 சதவிகித மார்க்கோடு, 2012-ம் வருஷம் படிச்சு முடிச்சேன்.

அதன்பிறகு, எம்.பி.ஏ படிக்க நினைச்சேன். அதுக்கும், அம்மாச்சி பண உதவி பண்ணாங்க. எம்.பி.ஏ-வுக்கு என்று பிரத்யேகமான கல்வி நிலையமா இருந்த நாமக்கல் மாவட்டம், வலையப்பட்டியில் இருக்கும் ஒரு கல்லூரியில், 2012 ஆகஸ்ட்டுல எம்.பி.ஏ ஹெச்.ஆர் மற்றும் ஃபைனான்ஸ் சேர்ந்தேன். அங்க படிக்கும்போது திடீர்னு, `ஒரு பெரிய கார்ப்பரேட் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து, சி.இ.ஓ நிலைக்கு உயரணும்’னு ஆசை வந்துச்சு. அதனால், தீவிரமா படிச்சேன். எம்.பி.ஏ-வையும் 82% மார்க்கோடு, கடந்த 2014 ல முடிச்சேன். ஆனா, என்னைப் படிக்க வைக்க நினைச்ச எங்க அம்மாச்சி சரோஜா, நான் எம்.பி.ஏ சேர்ந்த மூணாவது நாளே இறந்துட்டாங்க. அதன்பிறகு, எனக்கு உதவிய மாமா தங்கராஜூம் அதே வருடம் நவம்பர் மாசம் இறந்துட்டார். என்னோட தாத்தா சுப்ரமணியன் தொடர்ந்து என்னைப் படிக்க ஊக்குவிச்சார்.

சரவணக்குமார்

அதன்பிறகு, சென்னையில் உள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்துல அதே வருஷம் ரூ.10,000 சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன். மூன்றரை வருஷம் அங்க வேலை பார்த்தேன். கடைசியா, ரூ.24,000 வரை அங்க சம்பளம் வாங்கினேன். அதன்பிறகு, ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் இரண்டு வருஷம் வேலை பார்த்தேன். கடைசியா, ரூ.32,000 சம்பளம் வாங்கினேன். அதன்பிறகு, `குட்வில்’ங்கிற தனியார் நிதி மற்றும் வர்த்தக நிறுவனத்தில் 2019-ம் வருஷம் தொழில் விரிவாக்கப் பிரிவுல வேலைக்குச் சேர்ந்தேன். இந்த நிலையில், கடந்த 2020-ல் கொரோனா வந்தப்ப, வீட்டுக்கு வந்து வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில வேலை பார்த்தேன்.

இரண்டு மாசம் கழிச்சு லாக்டௌன் தளர்த்தப்பட்டப்ப, ஆபிஸ் போய் வேலைபார்த்தேன். இரண்டாம் அலை வந்தப்ப மறுபடியும் ஊருக்கு வந்து வீட்டுல இருந்து வேலை பார்த்தேன். அப்பதான், சி.இ.ஓ கனவு மேல வெறுப்பு வந்துச்சு. `நாம எவ்வளவு உழைச்சாலும், நாம் சார்ந்த நிறுவனங்கள் நம்மோட உழைப்பை இன்னும் அதிகம் உறிஞ்சவே விரும்புறாங்க. அதனால், சொந்தமா பிஸினஸ் பண்ணுவோம்’னு தோணுச்சு. வீட்டுல சொன்னப்ப, கடுமையா கண்டிச்சாங்க. உறவுக்காரங்க எல்லாம், `உனக்கு பைத்தியம் பிடிச்சுருக்கா. நல்ல வேலையை விட்டுட்டு, பாழும் கிணத்துல விழப்போறியா? பிஸினஸ் பத்தி உனக்கு என்ன தெரியும்?’னு பயமுறுத்தினாங்க.

இருந்தாலும், நான் சொந்தமா பிஸினஸ் தொடங்குறதுல உறுதியா இருந்தேன். டிரெஸ் கடை, செருப்புக் கடை, அரிசிக் கடைனு பல ஐடியாக்களை யோசிச்சேன். அதன்பிறகு, டீக்கடை ஐடியா வந்தது. ஏற்கெனவே கோலோச்சியிருக்கும் டீக்கடைகளின் பிரான்சைஸியை எடுத்து பண்ணலாமானு நினைச்சேன். ஆனால், அதுவும் மறுபடியும் நம் உழைப்பை யாருக்கோ அடிமை சாசனம் எழுதி தர்ற விஷயம்தான்னு தோணுச்சு. அதனால், சொந்த பேனர்ல வைக்கலாம்னு முடிவு பண்ணினேன். காந்திகிராமத்துல இந்த இடத்தை அட்வான்ஸ் ரூ. 50,000, வாடகை ரூ.13,500 னு பேசி புடிச்சேன். அதன்பிறகு, மாதம் ரூ.38,000 தந்துகொண்டிருந்த வேலையை ரிசைன் செய்ய, பேப்பர் போட்டேன். ஆனா, என்னை இழக்க விரும்பாத அந்த கம்பெனி, என் முடிவை மாத்திக்கச் சொல்லி மூணு மாசம் வரை தொடர்ந்து வற்புறுத்தினாங்க.

சரவணக்குமார்

ஆனால், நான் உறுதியா இருந்து, வேலையை ரிசைன் செஞ்சேன். ஆனா, முதன்முறையாக, `நம்மால இந்தத் தொழில்ல சைன் பண்ண முடியுமா?’னு பயம் வந்துச்சு. அந்த பயத்தை என்னோட நண்பர்கள் போக்கினாங்க. நான் சின்ன வயதில் இருந்தே டீ போடுறது, ஸ்நாக்ஸ் தயாரிக்கிறதுனு ஆர்வமா செய்வேன். சென்னையில் வேலை பார்த்தப்ப, அங்க ஹாஸ்டல்ல நண்பர்களுக்கு டீ, காபி, ஸ்நாக்ஸ்னு தயாரிச்சு கொடுப்பேன். `கம்பெனி கழுத்தைப் புடிச்சு வெளியே தள்ளுனா, காலத்தைத் தள்ள உன் கைவசம் ஒரு தொழில் இருக்கு’னு ஓட்டுவாங்க. அதைச் சொல்லி, `உன்னால இதுல ஜெயிக்க முடியும்’னு நண்பர்கள் மோட்டிவேட் பண்ணினாங்க. அதனால, துணிஞ்சு இறங்கினேன்.

`தேநீர் விருந்து’னு தமிழ்ல கடை பெயரை வச்சேன். அஞ்சு லட்சம் முதலீடு போட்டு, 304 ஸ்டீல்ல ஸ்டாண்டிங் டேபுள்ஸ், வால்மவுண்டன் டேபுள்ஸ், டீ சர்வீஸ் டேபுள்ஸ், வாஹிங்சிங்னு பல பொருள்களை வாங்கினேன். அம்மாவை மட்டும் துணைக்கு வச்சுக்கிட்டு, தொழிலை கடந்த 2021 ஜூலை மாசம் தொடங்கினேன். டீ, காபி தவிர, மெதுவடை, பருப்பு வடைனு போட்டேன். முதல் மாசம் டல்லா இருந்துச்சு. அடுத்த மாசம் போட்ட காசை எடுக்க முடிஞ்சது. அதன்பிறகு, `கடை ஹைஜெனிக்கா இருக்கு. ரெஸ்பான்ஸ் நல்லா இருக்கு. கடை கிளீனா இருக்கு.

டீ, காபி, ஸ்நாக்ஸ் நல்லா இருக்கு. நல்ல முயற்சி’னு இங்க வர்ற கஸ்டமர்கள் பாராட்டினாங்க. இங்க, 5 பேங்குகள் இருக்கு. அந்த ஸ்டாப்ஸ் எல்லாம் எனக்கு ரெகுலர் கஸ்டமர் ஆனாங்க. தவிர, மருத்துவக்கல்லூரி ஊழியர்கள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள்னு பலரும் எனக்கு ரெகுலர் கஸ்டமர் ஆனாங்க. அதனால், டீ, காபி தூளை ஊட்டியில் இருந்து ஸ்பெஷிபிக்கா வாங்குனேன். ஒரு டீக்கு புதுசா ஒரு ஸ்பூன் தூள்னு டீ, காபி போட ஆரம்பிச்சேன். தொடர்ந்து, இஞ்சி, ஏலக்காய், மசாலா, லெமன், புதினா, ஜிஞ்சர் லெமன், புதினா லெமன் மிக்ஸ்னு டீயில பல வகை டீயை போட ஆரம்பிச்சேன்.

அதேபோல், சுக்கு காபி, சுக்கு பால், சுக்கு மல்லி காபி, நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி கலந்த டீ, காபி, பூஸ்ட், ஹார்லிக்ஸ்னு புதுசா ஆட் பண்ணினேன். மெதுவடை, பருப்பு வடை, இனிப்பு போண்டா, காரபோண்டா, கீரை போண்டா, பஜ்ஜி, பிரெட் பஜ்ஜி, தயிர் வடைனு ஸ்நாக்ஸ்லயும் பலவகை தயார் பண்ணினேன். காலையில் 5 மணி தொடங்கி இரவு எட்டரை மணி வரை டீக்கடையை நடத்த ஆரம்பிச்சேன்.

நானும் எங்கம்மாவும் மட்டும்தான் இருப்பதால், பலநேரம் பயங்கர டயர்டா இருக்கும். `உனக்கு இது தேவையா?’ங்கிற மாதிரி அம்மா பரிதாபமா பார்ப்பாங்க. ஆனால், `யாருக்கோ வேலையில் உழைச்சதைவிட, நமக்காக உழைக்கும் இந்த உழைப்பில் ஒரு பேரானந்தம் இருக்கு’னு மறுபடியும் உற்சாக மோடுக்கு வந்துடுவேன். இப்போ, எல்லா செலவும் போக மாதம் ரூ.60,000 கையில் நிக்குது. இப்போதான், வீட்டுல என்மேல நம்பிக்கை வந்துருக்கு. அவநம்பிக்கையா பேசுன உறவுகளும், `பரவாயில்ல, டீக்கடை நல்லா போவுதுனு கேள்விப்பட்டோம். எந்நேரமும் சரவணன் கடையில் கூட்டம் நிக்குதாமே. நல்ல விசயம். அவன் கண்டிப்பா ஜெயிப்பானு எங்களுக்கு முன்னமே தெரியும்’னு அப்பாகிட்ட சொல்றாங்க. அதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பா இருக்கும். அடுத்து, இதே காந்திகிராமத்திலும், சென்னையிலும் பிராஞ்ச் ஆரம்பிக்கும் முயற்சியில் இருக்கிறேன்.

டீயும் சுண்டலும்

எல்லா முக்கிய ஊர்களிலும் என்னோட டீக்கடை இயங்கணும். அதுதான் உச்சபட்ச இலக்கு. அந்த நிலையை நிச்சயம் அடைவேன். அதேபோல், ஹோட்டல் ஆரம்பிக்கும் ஐடியாவும் இருக்கு. என்ன ஒண்ணு, என்னோட இந்த நிலைக்கு அடித்தளமா இருந்த என்னோட அம்மாச்சி, தாத்தா, மாமா மூணு பேரும் இப்போ உயிரோடு இல்லைகுறதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. ஆனால், என்னோட வளர்ச்சியை எங்கோ இருந்து மூணு பேரும் பார்த்து ஆனந்தபடுவாங்கனு நினைச்சு, மனசை தேத்திக்குறேன். நாம ஒரு முயற்சியை எடுக்கும்போது, நாலு பேர் நாலு விதமா சொல்வாங்கதான்.

ஆனா, நாம ஜெயிச்ச பிறகு, அதே நாலு பேரு, நம்மை வாழ்த்துவாங்க. அதனால், அந்த நாலு பேர் பேச்சை நாம இக்னோர் பண்ணிடனும். நம்மோட உழைப்பு, திறமைதான் நம்மோட வளர்ச்சியை முடிவு பண்ணும். அதனால், நம்மை நம்பி, நாம களத்தில் இறங்கணும். அப்படி செஞ்சா, வெற்றி 100 சதவிகிதம் நிச்சயம். அதுக்கு நானே உதாரணம். அதேபோல், பொய் சொல்றது, திருடுறது, கொள்ளையடிக்கிறது தவிர, வேற எல்லா தொழிலும் நல்ல தொழில்தான். அதேபோல, யாரையும் ஏமாத்தாம, சுற்றுச்சூழல், உடலுக்கு தீங்கு விளைவிக்காத எந்தத் தொழிலும் நல்ல தொழில்தான்” என்று உற்சாகமாகக் கூறி முடித்தார்.

அவரின் கதையைக் கேட்டு முடித்தபோது, அவரின் கடையில் இருந்த மொத்த பூஸ்ட், ஹார்லிக்ஸை எல்லாம் ஒட்டுமொத்தமாக குடித்த எனர்ஜி! வாழ்த்துகள் கைஸ்!

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments