தருமபுரம் ஆதீன குருபூஜைப் பெருவிழாவை முன்னிட்டுப் பட்டணப் பிரவேசப் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு தடைகளை கடந்து 27 -வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பட்டணப்பிரவேசம் சென்றார்.
மயிலாடுதுறையில் 16 -ம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீன மடத்தில் ஆண்டுதோறும் குருபூஜைவிழா, வைகாசி மாதம் 11 நாள்கள் கொண்டாடப்படும். இதில் 11 -ம் திருநாள் திருவிழாவாகப் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி பாரம்பர்யமாக நடப்பது வழக்கம்.
இவ்விழாவில் குருமகா சந்நிதானத்தை சிவிகை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தோளில் சுமந்து ஆதீனத் திருடத்தின் நான்கு வீதிகளிலும் சுற்றி வருவது வழக்கம்.
மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்குத் தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த மாதம் பல்லக்குத் தூக்கும் (பட்டணப்பிரவேசம்) நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடை விதித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டசபையில் கவனஈர்ப்புத் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.
பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்துக் கோரிக்கை வைத்த நிலையில் பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிகொள்வதாக கடந்த 7- ம் தேதி கோட்டாட்சியர் பாலாஜி ஆணைபிறப்பித்தார். இதனால் பட்டணப்பிரவேச நிகழ்ச்சி பிரபலமானதால் கடந்த காலங்களைவிட இந்தாண்டு நேற்றிரவு (22.5.2022) நடைபெற்ற பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்குத் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.
பட்டணபிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு இருந்ததால் தஞ்சை டி.ஐ.ஜி . கழல்விழி தலைமையில் 2 எஸ்.பி.க்கள் உட்பட 600 க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பல்வேறு தடைகளைக் கடந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரு ஆபரணங்கள் அணிந்துகொண்டு திருக்கூட்ட அடியவர்கள் புடைசுழ சிவிகை பல்லக்கில் குருமகாசந்நிதானம் எழுந்தருளினார். தொடர்ந்து, பல்லக்கினை தருமபுரம் ஆதீனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டுமே தூக்கும் பாரம்பர்யம் உள்ள நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. மூத்த நிர்வாகி எச்.ராஜா கைவைத்துத் தூக்கித் தொடங்கி வைத்தனர்.
யானை, குதிரை, ஒட்டகம் உள்ளிட்ட பரிவாரங்களுடன், நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், புலியாட்டாம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளோடு பக்தர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார்.
ஆதீனமடத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் பூர்ணகும்ப மரியாதையுடன் குருமகா சந்நிதானத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு குருமகாசந்நிதானம் ஆசி வழங்கினார்.