பெங்களூரு:”பெங்களூரு நகரில் பத்து நாட்களில் அனைத்து சாலை பள்ளங்களையும் மூடிவிடுவோம். பைதான் என்ற அதி நவீன வாகனம் மூலம், பள்ளங்கள் மூடும் பணி வேகமாக நடக்கிறது,” என மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்தார்.
பெங்களூரு நகரில் ஏற்பட்டுள்ள சாலை பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. அவற்றை மூடும்படி கர்நாடக உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், மாநகராட்சி அலட்சியமாகவே செயல்படுகிறது.
இது குறித்து, மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், கூறியதாவது:சாலை பள்ளங்கள் மூடுவதற்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மழையால் பணிகள் தாமதமானது. ஆனாலும், 5,500 பள்ளங்கள் மூடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.இன்னும் பத்து நாட்களில் அனைத்து பள்ளங்களையும் மூடிவிடுவோம். ‘பைதான்’ என்ற அதி நவீன வாகனம் மூலம், பள்ளங்கள் மூடும் பணி வேகமாக நடக்கிறது.
மழை பாதிப்பை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக முக்கிய பகுதிகளில் உள்ள கால்வாய்கள் துார்வாரப்படும். காளிதாஸ் லே அவுட்டில், மழை நீர் கால்வாய் பணியின் போது எதிர்பாராத சம்பவம் நடந்தது.அந்த இடத்துக்கு உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்தனர். அறிக்கை வந்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேவையெனில், ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் புகார் கொடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement