மும்பை-”சிறையில் இருந்தபோது எங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல்கள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவிக்க உள்ளோம்,” என, ஜாமினில் வெளி வந்துள்ள, மஹாராஷ்டிர மாநில சுயேச்சை எம்.பி., நவ்நீத் ராணா தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த மாதம் முதல்வர் வீட்டு வாசலில், ‘அனுமன் சாலிஸா’ துதியை பாடப்போவதாக, சுயேச்சை பெண் எம்.பி., நவ்நீத் ராணாவும், அவரது கணவரும், சுயேச்சை எம்.எல்.ஏ.,வுமான ரவி ராணாவும் அறிவித்தது
பதற்றத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மும்பை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கவே, இருவரும் 5ம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில், அவர்கள் நேற்று டில்லிக்கு புறப்பட்டனர். அப்போது, நவ்நீத் ராணா கூறியதாவது:நானும், என் கணவரும் டில்லிக்கு செல்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரை சந்தித்து, சிறையில் எங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல்கள் குறித்து அவர்களிடம் எடுத்துரைக்க உள்ளோம்.
மக்கள் பிரதிநிதிக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இங்கு நடக்கும் அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன். பா.ஜ.,வை முதுகில் குத்திய முதல்வர் உத்தவ் தாக்கரே, கொள்கைகள் குறித்து எங்களுக்கு பாடம் எடுக்க தகுதியற்றவர்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, நிபந்தனைகளை மீறியதால் நவ்நீத் ராணாவின் ஜாமினை தள்ளுபடி செய்யக் கோரி, மும்பை போலீசார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து பதில் அளிக்கும்படி நவ்நீத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
Advertisement