புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே, செந்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த சித்திரைவேல் என்பவர் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேல்தளம் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, கொத்தனார், சித்தாள் உட்பட வேலை பார்த்தவர்களுக்கு அறந்தாங்கியில் இருக்கும் ஏ1 பிரியாணி சென்டர் கடையிலிருந்து சுமார் 30 பிரியாணிப் பொட்டலங்களை வாங்கி வந்து கொடுத்திருக்கிறார். பிரியாணியை சிலர் அங்கேயே சாப்பிட்டிருக்கிறார்கள். பலரும் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று, மாலை குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டிருக்கின்றனர்
இந்த நிலையில் பிரியாணி சாப்பிட்ட தொழிலாளர்கள், அவரின் குடும்பத்தினர் பலரும், அடுத்தடுத்து மயங்கியதோடு, சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து, அவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர். பிரியாணி சாப்பிட்ட சம்பவம் தொடர்பாக, அடுத்தடுத்து அரசு மருத்துவமனையில் சுமார் 41 பேர் வரையிலும், அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் 15 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கின்றனர். 26 பேர் வரையி தற்போது சிகிச்சையில் இருந்துவருகின்றனர்.
இதற்கிடையே, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பிரியாணிக் கடைக்குச் சென்று உணவுப்பொருள்களை ஆய்வு செய்ததோடு, உணவு பாதுகாப்புத்துறையின் நெறிமுறைகளைப் பின்பற்றாததால், அந்தக் கடைக்கு சீல் வைத்தனர்.