பிரைம் டைம் பெருமாளு: இயக்குநர் சான்ஸ் கேட்டவரை நடிகராக்கிய சேனல்; நடிகையான மனைவி பெயரில் க்ளினிக்!

‘தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்’ சொன்னபடி என்ட்ரி தந்த பிரைம் டைம் பெருமாளுக்கு நாமும் பதில் வாழ்த்துச் சொல்லிக் கேசரியை நீட்டினோம்.

“வருஷம் முழுக்க இனிப்பான செய்தியாக் கிடைக்கட்டும்னு கேசரியா’ எனக் கிண்டலாய்க் கேட்டவர், ‘பசங்க’ சிவக்குமாருக்கு இந்த சுபகிருத வருஷம் சிறப்பானதாத் தொடங்கி இருக்கு” என்றார்.

அவருடைய சீரியல் என்ட்ரி பத்தின செய்தியா, சொல்லுங்க, சொல்லுங்க.. என ஆர்வமானோம்.

“பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட சில இயக்குநர்களிடன் உதவி இயக்குநராக இருந்த சிவக்குமார் படம் இயக்க வேண்டுமென்கிற ஆசையுடன் சினிமாவுக்கு வந்தவர்தான். டைரக்ஷன் கனவு இன்னும் கை கூடலை. இந்தச் சூழல்ல ஒ.டி.டி தளத்தில் வெப் சீரிஸ் பண்ணலாம்னு ஜீ தமிழ் சேனல்ல இருக்கிற சில நண்பர்கள் மூலமா அங்க போயிருக்கார். அந்த நேரத்துல அங்க ‘தவமாய் தவமிருந்து’ன்னு ஒரு சீரியலுக்கு முக்கியமான கேரக்டரைத் தேடிட்டிருந்தாங்க. இவரைப் பார்த்தவங்க, அந்தக் கேரக்டருக்கு இவரையே கமிட் செய்துட்டாங்க. இன்று முதல் தினமும் இரவு 7 மணிக்கு சீரியல் ஒளிபரப்பாகுது. சிவக்குமாருக்கு வாழ்த்துச் சொல்லிட்டு அவருக்கு ஜோடியா நடிக்கிற அனிதாவிடமும் பேசினேன்.

சிவக்குமார் – அனிதா

அனிதான்னா.. புதுமுகமா?

தமிழ் சீரியலுக்கு இவங்க புதுசு இல்லை. அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி சில சீரியல்கள்ல நடிச்சவங்கதான். என்ன காரணமோ தெரியலை, மறுபடி கேரளாவுக்குப் போனவங்க கடந்த சில வருடங்களா அங்கேயே இருந்துட்டாங்க. இப்ப திரும்பவும் வந்திருக்காங்க. ‘இந்த முறை எனக்கு தமிழ் ரசிகர்கள் ஆதரவு தந்தா சென்னையிலேயே செட்டில் ஆகிடலாம்னு இருக்கேன்’ என்ற முடிவில் இருக்கிறார்.

`ரசிகர்கள் மனசு வைக்கட்டும்’ என்ற நம் கமென்டைக் கண்டு கொள்ளாதவராய், “செய்திச் சேனல்ல ஒரு தகவல் கடந்த சில தினங்களாக தீயாகப் பரவிட்டு இருந்தது. `தந்தி டிவி’யில இருந்த ஹரிஹரனைக் காணோம்’கிறதுதான் அந்தத் தகவல்’ என நிறுத்தினார்.

என்ன பி.பி., சொல்றீங்க? முன்னாடி `ரிபப்ளிக் டிவிக்குப் போறேன்’னு போய் அடுத்த மாசமே திரும்பி வந்தாரே அதுபோல மறுபடியும் எங்கயும் போயிட்டாரா? காணோம்னா?

‘காணோம்’னு கேள்விப்பட்டதும் எனக்கும் இதே பதற்றம்தான். தகவல் சொன்னவங்ககிட்ட ‘என்னய்யா சொல்றீக’னு கேட்டேன்.

`தந்தி டியில இருந்து வெளியேறிட்டார்’னு சிலர் சொன்னாங்க. ‘இல்லை நிர்வாகம் அவரை வெளியில அனுப்பிடுச்சு’ன்னு சிலர் அள்ளி விட்டாங்க‌.

‘வேற எந்த சேனல்லயுமேகூட அவரைப் பார்க்க முடியலையே’?

அதே… அதே…

சஹானா

அதனால நேரடியா தந்தி தொலைக்காட்சி வட்டாரத்துலயே விசாரிச்சிட்டேன். இப்ப நான் சொல்றதுதான் உண்மைத் தகவல்…

அதாவது மனுஷன் நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு இஸ்ரேல் நாட்டுக்குப் போயிருக்காராம். அங்க சர்வதேச உறவுகள் குறித்த ஒரு படிப்பைப் படிக்கப் போயிருக்கிறாராம். சேனல்கிட்ட முறைப்படி அனுமதி வாங்கிட்டுத்தான் போயிருக்கிறார்னு சொல்றாங்க.’ எனத் தெளிவுபடுத்தியவரின் மொபைல் அழைக்க,

‘அப்படியா வாழ்த்துக்கள், ஸ்ஸுயர், அவசிய‌ம் வர்றேன்’ எனப் பதிலளித்து விட்டு நம் பக்கம் திரும்பினார். `சஹானா க்ளினிக்’ பேரு நல்லா இருக்குல்ல? ‘அழகு’ சீரியல்ல நடிச்ச சஹானா பேர்ல மருத்துவமனை திறந்திருக்கிறாராம் அவரது டாக்டர் கணவர். ‘ஆஸ்பத்திரிக்கு ஒரு நாள் வந்துட்டுப் போங்க’னு கூப்பிடுறாங்க’ என்றபடியே புல்லட்டை உதைத்துக் கிளம்பினார்.

Source link

Leave a Comment

Your email address will not be published.