“நீங்க கேட்ட மாதிரியே லெமன் ஜூஸ் ரெடி. குடிச்சிட்டு கல்யாணமோ, கச்சேரியோ எடுத்து விடலாம்” எனச் செய்திக்கு ஆவலானோம்.
”கல்யாணம்தான் மேட்டர். சன் டிவியில சமீபத்துல புதுசா ஒளிபரப்பாகத் தொடங்கின ‘எதிர் நீச்சல்’ சீரியல்ல ஒரு சீன். அந்தக் காலத்துலெல்லாம் கல்யாணம் எப்படி நடந்திச்சு? இப்ப மாதிரியா பொண்ணு மாப்பிள்ளையும் கல்யாணத்துக்கு முன்னாடியே சேர்ந்து டான்ஸ் ஆடிட்டிருந்தாங்க? கேட்டா ட்ரெண்டிங், வெட்டிங் போட்டோகிராபின்னு என்னத்தயாச்சும் சொல்லிகிட்டு… போங்கப்பா அந்தப்பக்கம்…’னு இப்படித்தான் போகுது அந்த டயலாக்.
“சமீபத்துல கூட இந்த மாதிரி ஒரு டான்ஸால கடைசி நேரத்துல மாப்பிள்ளை மாறின சம்பவத்தையே பார்த்தோமே… அதை சீரியல்ல காமிச்சிருக்காங்க, அப்படித்தானே?”
“உம்ம கருத்தை யார் கேட்டது? சீரியல்ல அந்தக் காட்சியில நடிச்ச நடிகருக்கும் சீரியலைத் தயாரிச்ச திருச்செல்வத்துக்கும் போன் மேல போனாம். இந்தக் காட்சி எங்களை இழிவு படுத்திடுச்சுன்னு வீடியோகிராபர்களும் வெட்டிங் போட்டோகிராபி எடுக்கிறவங்களும் கொதிச்சுப் போய்க் கிடக்கிறாங்க. என்ன செய்வீகளோ தெரியாது, இதுக்கு வருத்தம் தெரிவிக்கணும்னு கேக்கறாங்க அவங்க.
திருச்செல்வமோ, ‘ஏங்க அது ஒரு பிற்போக்குத்தனமான கேரக்டரின் கருத்து. அந்தக் கேரக்டர் அப்படித்தானே பேசும். நான் எதுக்குங்க வீடியோகிராபர்களைத் திட்டப் போறேன்’னு அப்பாவித்தனமா கேட்டிருக்கார்.
இதுல என்ன ஹைலைட்னா சீரியல் தொடங்கின நாளுல இருந்தே ரேட்டிங் கிடைக்கவே இல்லை. சன் டிவி வரலாற்றுலயே ஓப்பனிங் ரொம்பவே சுமாரா இருந்த சீரியல் இதுதான்னு நினைச்சிட்டிருந்தாங்க. ‘கோலங்கள்’னு ஒரு மெகா ஹிட் தந்த இயக்குநருடைய சீரியல் ஏன் இப்படி இருக்குனு காரணம் தெரியாம தலையைப் பிய்ச்சுட்டிருந்தாங்க. இந்த ஒரேயொரு சீன் வந்து அதையெல்லாம் மாத்திடுச்சு. நெகட்டிவ் பப்ளிசிட்டின்னாலும் பார்க்காதவங்களையும் சீரியலைப் பார்க்க வச்சிடுச்சுன்னு யூனிட்டே பெருமூச்சு விடுது.
வரும் போது சொன்ன பழமொழிக்கு அர்த்தம் புரியுதா?” எனச் சிரித்துவிட்டு அடுத்த செய்திக்குச் சென்றார்.