“இப்பவே உச்சந்தலையைப் பிளக்குது வெயில். இன்னும் அக்னி நட்சத்திரமெல்லாம் இருக்கு. இந்த வருஷம் சூரியன் சுட்டெரிப்பார்னுதான் தோணுது” என்றபடியே வந்தமர்ந்தார் பிரைம் டைம் பெருமாளு.
“சூரியன் எரிக்கறது இருக்கட்டும், தப்புத் தப்பாத் தகவல் சொன்னா சீரியல் ரசிகர்கள் நம்மைப் பார்வையாலேயே எரிச்சிடுவாங்க” எனக் கோபம் காட்டினோம்.
“புரியுது, விஜய் டெலி அவார்ட்ஸ் ஏப்ரல் கடைசியில இருக்கும்னு சொல்லியிருந்தேன். ஆனா சன் டிவி விருது நடத்திய மூணாவது நாளே அதாவது ஏப்ரல் 2ம் தேதியே நடத்திட்டாங்க. இதைத்தானே சொல்ல வர்றீங்க?” எனச் சொன்னவர், “ஏன்னு தெரியலை, இப்பெல்லாம் விஜய் டிவியில சில நிகழ்ச்சிகள் குறித்துக் கேட்டால், ஷங்கர் பட அப்டேட் மாதிரி பில்டப் தர்றாங்க. இருந்தாலும் தப்புக்கு நான் சாரி கேட்டுக்கறதுதான் முறை” என்றவருக்கு கூடுதலாக இரண்டு ஐஸ் கட்டிகள் போட்டு மோர் கொடுத்தோம்.
‘இதம், இதம்’னு சொல்லியபடியே குடித்தவர், “ரெண்டு விருது நிகழ்ச்சிகள் குறித்துமே குறைபட்டுக்கிட்டவங்கதான் நிறைய” என மேட்டருக்குள் வந்தார்…
“சன் குடும்பம் விருதுகள் விழா ஏற்பாடுகள் ரொம்பவே சுமார் ரகமாம். மாலையில் தொடங்கின நிகழ்ச்சிக்குக் காலையிலேயே வந்து காத்திட்டிருந்திருக்காங்க நடிகர் நடிகைகள். ஏற்கெனவே வெயில். இதுல நிகழ்ச்சி நடக்க இருந்த அரங்கத்துல திடீர்னு ஏசி வேலை செய்யலை. வியர்வையில குளிச்ச பல ஆர்ட்டிஸ்டுகள், இதுக்கு பேசாம வீட்டுலயே இருந்திருக்கலாம்’னு புலம்பியதைக் கேட்க முடிஞ்சது. விருதுகளைப் பொறுத்தவரை ‘கயல்’, ‘சுந்தரி’, ‘அன்பே வா’ உள்ளிட்ட சில சீரியல்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதா தெரியுது.