புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில், பேருந்து நிறுத்தம், கே. புதுப்பட்டி சாலை என 2 இடங்களில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரிமளத்திலிருந்து கே.புதுப்பட்டி செல்லும் சாலையிலேயே புதிதாக 3-வதாக ஒரு டாஸ்மாக் கடையை திறக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போதே இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர். இதனால், தற்காலிகமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்நிலையில், பொதுமக்களின் எதிர்ப்புகளையும் மீறி அரிமளம் பகுதியில் அவசர, அவசரமாக பொருட்கள் கொண்டு வரப்பட்டு 11-ம் தேதி 3-வதாக ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர். இதனையறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் நிர்வாகம் அந்தக் கடையை மூடியது. தொடர்ந்து கடைக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
இதற்கிடையே திரண்டு வந்த பொதுமக்கள், ஏற்கெனவே செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் கடைகளையும், இழுத்து மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அந்தக் கடைகளை இழுத்து மூட வைத்தனர். தொடர்ந்து, கே.புதுப்பட்டி சாலையில், அமர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறை அதிகாரிகள், வட்டாட்சியர் உட்பட அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.