புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் வாழவந்த பிள்ளையார், முத்துமாரியம்மன், பேச்சியம்மன், வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வைகாசித் திருவிழா கடந்த மே.15 – ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினசரி அம்மன் வீதி உலா, சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா நடைபெற்றது. காய், கனித் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், முத்துமாரியம்மன் எழுந்தருளினார். வேறெங்கும் இல்லாத வகையில், கொத்தமங்கலத்தில் மூன்று தேர்கள் தேரோட்ட வீதிகளில் பக்தர்களால் இழுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பேச்சியம்மன் தேரை முழுக்க, முழுக்கப் பெண்களே சேர்ந்து இழுக்கின்றனர். நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து தேரை வடம் தொட்டு இழுத்துச் சென்றனர்.
அடுத்ததாக, வாழவந்த பிள்ளையார் தேரை அப்பகுதி சிறுவர்கள், இளைஞர்கள் இழுக்கின்றனர். அடுத்ததாக முத்துமாரியம்மன் தேர் ஊர் கூடி இழுக்கின்றனர். பேச்சியம்மன் தேர் முன்னே செல்ல, பிள்ளையார் தேர் பின்னே வர, முத்துமாரியம்மன் பிரமாண்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 2 கி.மீ தூரம் 3 தேர்கள் பவனி வந்த காட்சி பிரமிப்பூட்டுவதாக இருந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் இழுத்தனர். கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் பிறகு திருவிழா நடைபெற்ற நிலையில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல், சுற்றுவட்டாரப் பகுதிகளான குளமங்கலம் வடக்கு மணிவர்ண மழை மாரியம்மன் கோயில், மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோயில், முத்துப்பட்டினம் முத்துக்காமாட்சியம்மன் கோயிலிலும் தேரோட்ட விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.