‘சங்கரனுக்கு ஆபரணம் போன்றவள்’ என்ற பொருளில் ‘சங்கராபரணி’ என்ற பெயர்கொண்டு, செஞ்சி என்னும் இடத்தில் தோன்றி, விழுப்புரம் மாவட்டம் வழியாகத் தவழ்ந்தோடி, புதுச்சேரிக்கு அருகில் கடலில் சங்கமிக்கும் ஆறுதான் சங்கராபரணி. ‘செஞ்சியாறு’, ‘கிளிஞ்சளாறு’, ‘வராக நதி’ என்று பல பெயர்களில் அழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் கரையில் எண்ணற்ற புராதனமான திருத்தலங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் திருக்காஞ்சி அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் திருக்கோயில்.
மனிதர்களின் அஞ்ஞானத்தை அகற்றி ஞான ஒளியைப் பெருக்கவும், பிறவிப் பிணியைப் போக்கிப் பேரின்ப பெருவாழ்வை அருளவுமே, ‘திருக் காஞ்சி’ என்னும் தலத்தில் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் என்னும் திருப்பெயருடன் சோடஷ லிங்க வடிவத்தில் அருள்புரிகிறார் சிவனார். வடக்கு நோக்கி உத்தரவாகினியாக சங்கராபரணி பாய்வதால், இந்த ஆறு கங்கைக்கு நிகராகவும், இந்தத் தலம் காசிக்கு நிகரான தலமாகவும் போற்றப்படுகிறது.
அதன் காரணமாகவும் சங்கராபரணி என்னும் வராக நதியின் கரையில் கோயில் கொண்டிருப்பதாலும் இந்தத் திருத்தலத்து இறைவன் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் இந்த இறைவன் அகத்திய மகரிஷியால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பெற்றவர் என்பதால், இந்தக் கோயில் அகத்தீஸ்வரம் என்னும் பெயரிலும் போற்றப்படுகிறது. குருபகவான் ஆண்டுதோறும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடையும் போது குறிப்பிட்ட ராசிக்குரிய நதியில் புஷ்கரணி விழா நடைபெறும்.
அந்த வகையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ம் தேதி மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு குருபகவான் இடம் பெயர்கிறார். அதன்படி கங்கை நதிக்கு இணையான சங்கராபரணி நதியில் மகா புஷ்கரணி விழா நடைபெற இருக்கிறது. அதற்காக நாட்டின் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து நீரை எடுத்து வந்து யாகம், ஹோமம் செய்து சங்கராபரணி ஆற்றில் கலக்கப்பட இருக்கிறது. அதனால் புனித நதியான சங்கராபரணியில் நீராடுவதற்காக நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள். புஷ்கரணி விழாவையொட்டி சங்கராபரணி ஆற்றின் கரையோரத்தில் 64 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் பிரமாண்டமான சிவபெருமான் சிலை அமைக்கப்பட இருக்கிறது. அதற்கான பூமிபூஜை நடந்து முடிந்திருக்கிறது. அதேபோல புஷ்கரணிக்கு முன்பாக சிலையை அமைத்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்யவும் புதுச்சேரி அரசு திட்டமிட்டிருக்கிறது.
சங்கராபரணி மகா புஷ்கரணி விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. பொதுப்பணித்துறை மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில், சங்கராபரணி ஆற்றின் கரையோரத்தில் சிவபெருமான் சிலை அமைக்கும் கட்டுமான பணியை வருகின்ற 15-ம் தேதிக்கு பிறகு தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் மகா புஷ்கரணி விழாவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், கங்கை நதீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலைகளைக் கூடுதலாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அத்துடன் படித்துறைகள், கலை நிகழ்ச்சிகள் நடப்பதற்கான நிரந்தர மேடை, கழிவறை, குளியலறைகள் போன்றவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.