புதுச்சேரி, கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சரத் (எ) பொடிமாஸ். பிரபல ரெளடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. எதிரிகளை கொலை செய்வதற்கு நாட்டு வெடிகுண்டுகளை தயாரிப்பதில் இவர் கைதேர்ந்தவர். லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம் பகுதியில் காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ள ரெளடிகளில் இவரும் ஒருவர். அத்துடன் லாஸ்பேட்டை காவல் நிலையத்தின் குற்றப்பதிவேட்டிலும் இவரின் பெயர் இருக்கிறது.
இவரின் தொடர் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு கடந்த 2020-ம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின் வெளி வந்தார். அதேபோல் கடந்த ஜனவரி மாதம் லாஸ்பேட்டை சண்முகா நகர் பாய் தோப்பில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு ரெளடிக் கும்பல் பதுங்கியிருப்பதாக லாஸ்பேட்டை போலீஸாருக்கு தகவல் சென்றது. அதனடிப்படையில் வீச்சரிவாள், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வெடிமருந்துகள் உள்ளிட்டவையுடன் சுற்றி வளைக்கப்பட்ட அந்த கும்பலில், சரத் என்ற பொடிமாசும் ஒருவர்.