தனது முதல் திரைப்படத்திற்காக செல்வமணி மேற்கொண்ட விடாமுயற்சிகளும் உழைப்பும் புறக்கணிப்புகளும் இன்றைய இளம் இயக்குநர்களுக்கான பாடம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆல்பம் மட்டுமல்லாமல், திரைப்படக் கல்லூரியில் தான் உருவாக்கிய குறும்படத்தையும் ராவுத்தருக்கு போட்டுக் காட்டினார் செல்வமணி. (‘ஊமை விழிகள்’ திரைப்படத்திற்காக ஆபாவாணன் முன்பு செய்த அதே டெக்னிக் இது). இதனால் ராவுத்தருக்கு செல்வமணியின் மீதான நம்பிக்கை சற்று அதிகமானது. அவர் இதை விஜயகாந்திடம் சொல்ல ‘புலன் விசாரணைக்கான’ வாசல் இன்னமும் அகலமாகியது. ஆங்கிலத் திரைப்படங்களுக்கு நிகராக, பிரமாண்டமான இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஆசைப்பட, செல்வமணிக்கும் உற்சாகம் கூடியது.
இயக்குநராலேயே பார்க்க முடியாத திரைப்படம்
அதன் பிறகு மளமளவென வேலைகள் ஆரம்பமாகின. முதல் நாள் படப்பிடிப்பே செல்வமணிக்கு பிரமாண்டமாக அமைந்தது. ஐநூறு துணை நடிகர்கள், நூறு டான்ஸர்கள், பிரமாண்டமான செட், ஐந்து ஜெனரேட்டர்கள் என்று முதல் நாளில் ஒரு பாடல்காட்சியை படமாக்கத் துவங்கினார் செல்வமணி. படத்தின் காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக இயக்குநர் சில விஷயங்களைக் கறாராக எதிர்பார்க்க, அந்தத் தகவல் திரிக்கப்பட்டு வேறு மாதிரியான வம்பாகத் தயாரிப்பு நிர்வாகத்திடம் சென்று சேர்ந்தது. இதனால் விஜயகாந்த்தின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டார் செல்வமணி.
ராவுத்தரால் செல்வமணியின் கடுமையான உழைப்பைப் புரிந்து கொள்ள முடிந்ததால் இயக்குநருக்கு ஆதரவும் உற்சாகமும் தந்தார். படப்பிடிப்புத் தளங்களில், ஓர் இயக்குநராக தனது எதிர்பார்ப்புகளைக் கறாராக சொல்வதால் சக தொழில்நுட்ப கலைஞர்களின் பகையையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
ஓர் அறிமுக இயக்குநருக்கு இத்தனை பெரிய பிராஜக்ட்டின் முதல் நாள் என்பது பரவசமும் மகிழ்ச்சியும் கலந்த நாளாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் செல்வமணிக்கு அது சோதனை நாளாக அமைந்தது. தகவல் இடைவெளி காரணமாக இந்தச் சோதனைகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றன. ஹீரோவிடம் நேரடியாக பேச முடியாமல் மற்றவர்களின் மூலமே காட்சிகளுக்கான குறிப்புகளைச் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. செல்வமணிக்கு உறுதுணையாக இருந்த ராவுத்தருக்கும் ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் விஜயகாந்த்திற்கும் ராவுத்தருக்குமான உறவிலேயே விரிசல் ஏற்படும் சூழலும் ஏற்பட்டது.
பல இடையூறுகள் இருந்தாலும் தன்னுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப காட்சிகளை பதிவாக்குவதில் கவனம் செலுத்தினார் செல்வமணி. குறைந்த நாள்களே இருந்தாலும் பொங்கல் பண்டிகையன்று படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிர்வாகம் திட்டமிட்டது. (14-01-1990). எனவே சூறாவளியாக சுழன்று பணியாற்றினார் செல்வமணி. மூன்று யூனிட்களை வைத்துக் கொண்டு ஒரே நாளில் பாக்கியுள்ள காட்சிகளை முடித்து படத்தை ஒருவழியாக இறுதி நிலைக்குக் கொண்டு வந்தார்.