பெங்களூரு:மழை பாதிப்பிலிருந்து, ‘பெங்களூரு பிராண்ட்’ பெயரை, தக்க வைக்கும்படி பா.ஜ., மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு நகரில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.இது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்:
முன்னணி நகரம்
பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் முன்னணி நகரமான பெங்களூரு, மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.இது, ‘பெங்களூரு பிராண்ட்’ என்ற பெயருக்கான அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இது, எதிர்காலத்தில் தொழில்கள் மற்றும் முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தும் செய்தியாக இருக்கும். இதனால் மற்ற மாநிலங்களுக்கு தொழில்கள் இடம் மாறி, மாநிலத்தின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும்.நான் முதல்வரானதும், தகவல் தொழில்நுட்ப துறைக்கு முன்னுரிமை கொடுத்தேன்.
பெங்களூரு நகரம், அமெரிக்காவின் கலிபோர்னியா நகருக்கு மாற்றாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. அதன் பலனாக, இன்று பெங்களூரு நான்கு மடங்கு பெரிய நகரமாக வளர்ந்துள்ளது.இதனால், புறநகரின் பல பகுதிகள் நகருக்குள் இணைக்கப்பட்டு, மாநகராட்சி வருவாயை அதிகரித்துள்ளது. மாநில பட்ஜெட் தொகையின் பாதி வருவாய் பெங்களூரில் கிடைக்கிறது.
பெங்களூரின் எதிர்காலம் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி பற்றிய தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, ‘பெங்களூரு பிராண்ட்’ என்ற பெயரை தொலைநோக்கு வழியில் பாதுகாக்க துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
இது தொடர்பாக, பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
* நான் முதல்வராக இருந்தபோது, பெங்களூரின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பெங்களூரு தொழில்நுட்ப குழுவை மறுசீரமைத்து, தொலைதுார பகுதியில் பெங்களூரின் வளர்ச்சிக்கான வரைபடத்தை எடுக்க பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்
* பெங்களூரு நகர எல்லையில் சாக்கடை அமைப்பை மேம்படுத்தி, மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக நிபுணர்கள் குழுவை உருவாக்கி, பருவமழை தொடங்கும் முன் அடிப்படை பணிகளை நிர்வகிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்
* பெங்களூருக்கு மாற்றாக மைசூரு, துமகூரு, ஹூப்பள்ளி போன்ற நகரங்களை அடையாளம் கண்டு, பெங்களூரு நகரத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கவும். என் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட மைசூரு – பெங்களூரு நெடுஞ்சாலை, இன்று பத்து வழிச்சாலை கொண்ட தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது, இதன் மூலம் மைசூரு நகரம், பெங்களூரு வளர்ச்சிக்கு மாற்றாக அமையும்
* பெங்களுருவின் அதிகார வரம்பில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகளின் நம்பிக்கையை பெற்று, மண்டல வாரியாக பிரச்னைகளை கண்டறிந்து, அவற்றுக்கு நிரந்தர தீர்வுக்கு திட்டம் வகுத்து நிதி வழங்க வேண்டும்.
ஆலோசனை
மேற்கூறியவை தவிர, எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை பெற வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆளுங்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், முதல்வருக்கு கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
Advertisement