கேரள மாநிலம் மலப்புறம் பெரிந்தல்மண்ண பகுதியில் மதரசா ஆண்டுவிழா மற்றும் புதிய கட்டடம் திறப்புவிழா நடைபெற்றது. அதில், அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா மேடையில் மத தலைவர்கள் குழுமியிருந்தனர். அப்போது மாணவன் ஒருவனது பெயர் அழைக்கப்பட்டது. அந்த மாணவன் மேடைக்கு வந்து பரிசை வாங்கிச் சென்றான். அடுத்ததாக, பத்தாம் வகுப்பு மாணவி மாஸிதா பீவி மைக்கில் மேடைக்கு அழைக்கப்பட்டார். அவரும் மேடைக்கு வந்தார். அப்போது மேடையில் நின்றிருந்த சமஸ்தா என்ற இஸ்லாமிய அமைப்பின் துணைத்தலைவர் அப்துல்லா முஸ்லியார், “பத்தாம் வகுப்பு மாணவியை மேடைக்கு அழைத்தது யார்? இனி பெண்களை மேடைக்கு அழைக்கக்கூடாது. சமஸ்தாவின் தீர்மானம் தெரியுமா? பெண்களின் பாதுகாவலர்களை பரிசு வாங்க மேடைக்கு வரச் சொல்லுங்கள்” எனக்கூறி, பரிசுவாங்க வந்த மாணவியை திருப்பி அனுப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டது. இது பெண் இனத்தை அவமதிக்கும் செயல் என எதிர்ப்புக் கிளம்பியது.
இதுபற்றி சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த கேரளா உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து கூறுகையில், “பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமான அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும். முஸ்லிம் பெண்கள் கல்வியில் நன்றாக முன்னேற்றம் கண்டுவருகின்றனர். பெண் குழந்தைகள் தீப்பந்தமாக எரியும் காலம் இது” என்றார். மேலும் காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், சி.பி.எம் முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் உள்ளிட்டவர்கள் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.