இந்த வழக்கில், ஒரு தரப்பாக ஆளுநர் இல்லை என்றாலும், ஆளுநரை உச்ச நீதிமன்றம் மிகவும் கடுமையாக கேட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப வேண்டிய காரணமென்ன என்று கேட்டிருக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசால் விசாரிக்கப்பட்ட வழக்குகள் அனைத்திலும் கருணை மனுவைப் பரிசீலிக்க மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும் என்று ஒரு விஷயம் இருந்தது.
ஆனால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைவிட அரசியல் சட்டம் பெரியது என்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகக் கூறிவிட்டது. எனவே, பிரிவு 161-ன்படி பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது. ஆனால், தேவையில்லாமல் கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சரியில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒரு குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
ராஜீவ் காந்தி படுகொலை ஒரு பயங்கரவாதச் செயல் என்பதில் எந்த சந்தேகமும் இலலை. அதே நேரத்தில், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்தால், பயங்கரவாதத்துக்கு எதிரானவர்கள் என்கிற பா.ஜ.க-வின் இமேஜ் பாதிக்கப்படும். எனவே, விடுதலை செய்வது என்கிற முடிவை எடுப்பதற்கு தயங்கும் மத்திய அரசு, நீதிமன்றமே விடுதலை செய்துவிட்டால் நல்லது என்று நினைக்கிறது. எனவே, இந்த விவகாரத்தை இழுத்துக்கொண்டே போகிறார்கள். இப்போது, அதன் கடைசிக் கட்டத்துக்கு இப்பிரச்னை வந்திருக்கிறது.
தற்போது, ‘ஆளுநர் கடமையைச் செய்யத் தவறிவிட்டார். குடியரசுத் தலைவர் எடுக்கும் எந்த முடிவும் உச்ச நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தாது’ என்று கூறியிருக்கும் நீதிபதிகள், பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் நாங்களே ஒரு முடிவை எடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.