புதுடில்லி : ”பொது சிவில் சட்டம் குறித்து, நாடு தழுவிய அளவில் விவாதம் அவசியம். இது, நேர்மறையான, உருப்படியான தீர்வுகளை தரும்” என, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.
இதுகுறித்து டில்லியில் நேற்று அவர் கூறியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டு விழா கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பொது சிவில் சட்டம் குறித்து தேசிய அளவில் விவாதம் நடக்கிறது. நிறைய பேர், இச்சட்டத்தை ஆதரிக்கின்றனர். அதேபோல, நிறைய பேர் எதிர்க்கவும் செய்கின்றனர். தற்போதைய சூழலில், நாடு தழுவிய அளவில் விவாதம் தேவை. இது, நேர்மறையான, உருப்படியான தீர்வுகளை தரும் என, நம்புகிறேன்.
இவ்வாறு, அவர், கூறினார்.
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா, இரு தினங்களுக்கு முன் அளித்த பேட்டியில்,’பெண்களின் உரிமைகளை பறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆணும், மூன்று அல்லது நான்கு பெண்களை, திருமணம் செய்யும் போக்கு உள்ளது. பலதார மணத்தை ஒழித்துக் கட்ட, பொது சிவில் சட்டம் தேவை’ என கூறியிருந்தார். ஏற்கனவே, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி, ஹிமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர், தங்கள் மாநிலங்களில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளனர்.
உ.பி.,யிலும், ‘பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த எல்லா விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்’ என, அம்மாநில துணை முதல்வர் மவுரியாவும் தெரிவித்து இருந்தார்.கடந்த 2019 பொதுத்தேர்தலின்போது, பா.ஜ., வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும்’ என வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement