மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே இந்துத்துவா கொள்கைக்கு மாறிய பிறகு மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கி பிரச்னையை கையிலெடுத்தார். அதோடு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒளரங்காபாத்தில் பொதுக்கூட்டமும் நடத்தினார். வரும் 5-ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்திக்குச் செல்லவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், திடீரென தனது அயோத்தி பயணத்தை ராஜ் தாக்கரே ஒத்தி வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், இன்று புனேவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே கலந்துகொண்டு பேசினார். இந்த பொதுக்கூட்டத்துக்கு போலீஸார் 13 நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே, “பிரதமர் நரேந்திர மோடி உடனே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும். ஒளரங்காபாத் நகரத்தின் பெயரை சாம்பாஜி நகர் என்று மாற்றவேண்டும். காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியிலிருந்தபோது ஓட்டு வங்கிக்காக ஒளரங்காபாத் நகரத்தின் பெயரை மாற்ற எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சில அரசியல் கட்சிகள் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி வளர்ச்சியடைய உதவி செய்துள்ளனர். அவர்கள் உதவி செய்யாமல் இருந்திருந்தால் ஒவைசி எம்.பி-யாகி இருக்கமுடியாது. ஒளரங்கசீப்பை சரத் பவார் புனிதராக நினைக்கிறாரா? ஒளரங்கசீப் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தவே வந்ததாக சரத் பவார் கூறுகிறார். ஒளரங்காபாத்தில் உள்ள ஒளரங்கசீப் கல்லறை மேம்பாட்டுப்பணிகளுக்கு யார் நிதியுதவி செய்வது?
எனது ஒலிபெருக்கி போராட்டத்தை விரும்பாதவர்கள், நான் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்திக்குச் செல்லும்போது என்னை சிக்கவைக்க சதி செய்திருந்தனர். ஆனால் நான் அவர்களின் பொறியில் சிக்கவில்லை. எங்களது கட்சி தொண்டர்கள் சிறை செல்வதை விரும்பவில்லை. நான் அயோத்தி சென்றிருந்தால் எனது கட்சித் தொண்டர்கள் சட்டச்சிக்கலில் சிக்கி நாங்கள் தேர்தலில் போட்டியிடுவது பாதிக்கப்படும். எனவேதான் எனது அயோத்தி பயணத்தை ஒத்திவைத்தேன்.
15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்துக்கு சிலர் இப்போது மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் என்ன? சட்டவிரோதமாக மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அரசு அகற்றவில்லையெனில் மசூதிக்கு வெளியில் ஹனுமான் பாடல்களை பாடும்படி சொன்னேன். ஆனால் ரானா தம்பதி மாதோஸ்ரீ இல்லத்திற்கு சென்று ஏன் ஹனுமான் பாடல்களை பாட வேண்டும். அது என்ன மசூதியா? இவை முடிந்த பிறகு ரானா தம்பதி சிவசேனாவின் சஞ்சய் ராவுத்துடன் அமர்ந்து சாப்பிடுகின்றனர்” என்றார்.