போதையில் உள்ளாடையுடன் சுற்றிய ஓட்டுநர்… வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் முகம் சுளித்த பயணிகள்! | private bus driver roamed Vellore’s new bus stand half-naked in a drunken state

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வேலூர் புதிய பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுவருகிறது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில் குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, மின் இணைப்புகள், பாதாளச் சாக்கடை இணைப்பு போன்ற எஞ்சிய பணிகள் மட்டுமே நடைபெற்றுவருவதாகவும், இன்னும் ஓரிரு மாதங்களில் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்துவிடும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் சொல்கிறார்கள். கட்டுமானப் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து வெளியூர் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்துக்குச் சென்றுதான் புறப்படுகின்றன. சென்னை, சோளிங்கர், அரக்கோணம், திருத்தணி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மட்டுமே புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றன. இதனால், பயணிகள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்கிறது. ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியவர்கள் சிலர் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியிலுள்ள கோயிலின் பின்புறம் தங்கி உறங்குகிறார்கள்.

உள்ளாடையுடன் சுற்றிய பேருந்து ஓட்டுநர்

உள்ளாடையுடன் சுற்றிய பேருந்து ஓட்டுநர்

வெளிச்சம் குறைவாக இருப்பதால் விடலைக் கூட்டமும், போதை ஆசாமிகளும் அங்கு சுற்றுகிறார்கள். இரவு நேரங்களில், காவல்துறையினரும் பேருந்து நிலையத்துக்குள் ரோந்து வருவது கிடையாது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு பேருந்து ஓட்டுநர் ஒருவர் உள்ளாடையுடன், மதுபோதையில் பேருந்து நிலையத்துக்குள் ஓவர் அலப்பறையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதனால், அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஆதரவற்ற பெண்களும், முதியவர்களும் அவதிக்குள்ளாகினர். சென்னை பேருந்துகளுக்காகக் காத்திருந்த பெண் பயணிகளும் முகச்சுளிப்புக்கு ஆளாகினர்.

அந்த தனியார் பேருந்து, வேலூரிலிருந்து சோளிங்கர் வழியாக திருத்தணி செல்கிறது. நேற்று இரவு 10 மணியளவில் வந்த அந்தப் பேருந்து, இன்று அதிகாலை 2:30 மணிக்கு திருத்தணி புறப்பட தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. இரவு ஓட்டி வந்த ஓட்டுநர், மாற்று ஓட்டுநரிடம் வண்டியை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குப் புறப்படாமல், பேருந்து நிலையத்துக்குள்ளேயே அமர்ந்து மது குடித்துள்ளார். பின்னர், சட்டை, பேன்ட்டைக் கழற்றி வைத்துவிட்டு உள்ளாடையுடன் அவர் பேருந்து நிலையத்துக்குள் சுற்றிகொண்டிருந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தையடுத்து, “பேருந்து நிலையத்தில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். ஆபாசமாக நடந்துகொள்ளும் இது போன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள் மக்கள்.

Source link

Leave a Comment

Your email address will not be published.