இன்று இரவு எட்டு மணியளவில், சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில், மத்திய சென்னை பா.ஜ.க பட்டியலினப் பிரிவு தலைவர் பாலசந்தர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், தாங்கள் மறைந்துவைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பாலசந்தரை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அவரின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பாலசந்தர் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததினால், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு (PSO) வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் தேநீர் அருந்திக்கொண்டிருந்த நேரத்தில் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. தப்பியோடிய கொலைக் குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். மேலும், அந்த பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வுசெய்து குற்றவாளிகளைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.