Friday, June 17, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்மகாமாரியம்மன் திருவிழா: தினமும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் வீதியுலா - பூக்குழி இறங்கிய பக்தர்கள்!

மகாமாரியம்மன் திருவிழா: தினமும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் வீதியுலா – பூக்குழி இறங்கிய பக்தர்கள்!

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தில் உள்ள மகாமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்தார்.

அதேபோல், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 11 மணிக்கு மேல்வடிசோறு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, அன்று நள்ளிரவு ஒரு மணியளவில் பூக்குழி வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதேபோல், நேற்று திங்கட்கிழமை மாலை சுற்றுவட்டாரப் பகுதியைs சேர்ந்த பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளத் திரளாக வந்தனர். அவர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாகக் கோயிலை வந்தடைந்தனர்.

தீக்குண்டத்தில் இறங்கும் பக்தர்கள்

அதனைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் தயாராக இருந்த தீக்குண்டத்தில் ஆண்கள் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதேபோல், பெண்கள் பூ வாரிப் (நெருப்பு) போட்டுக் கொண்டு, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, மகாமாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதேபோல், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அந்த நிகழ்வைத் தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

ஏராளமான பக்தர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதோடு, இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில், சிறப்பு வாகனத்தில் திருவீதி உலா வந்தார். வீடு தோறும் உள்ள பொதுமக்கள் அம்மனுக்குத் தேங்காய் உடைத்துப் பழம் வைத்து கற்பூர தீபம் காட்டி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் வருகைதந்த மகாமாரியம்மனை பக்தர்கள் அனைவரும் மெய்சிலிர்க்க வணங்கினர்.

தீக்குண்டத்தில் இறங்கும் பக்தர்கள்

அதேபோல், இன்று (3-ம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் போட்டுச் செய்யும் பொங்கல் பூஜையும், அதனைத் தொடர்ந்து மாவிளக்குகளை ஊர்வலமாகக் கொண்டு வந்து அம்மன் முன் வைத்து செய்யும் விளக்கு பூஜையும் நடைபெறுகிறது.

இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. நாளை (4-ம் தேதி) புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் கம்பம் ஆற்றுக்குச் செல்லும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பகல் 11 மணிக்கு மேல் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கின்றன.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments