இது தலைவரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு ஜூம் காலில் பஞ்சாயத்தும் நடந்தது. அப்போது துணைத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் ஒன்றுகூடி, கட்சியில் யாருக்கு என்ன அதிகாரம் என்பதை வரையறை செய்யுங்கள் எனத் தலைவர் கமல் உத்தரவிட்டார். ஆனால், இரண்டுமுறை இந்தக்குழு கூடியும் சுமுக முடிவை எட்ட முடியவில்லை. காரணம், மூன்று மாநிலச் செயலாளர்களும் துணைத் தலைவர்களையும் மற்ற முன்னணி நிர்வாகிகளையும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. தவிர, சிவ.இளங்கோ, செந்தில் ஆறுமுகம் ஓர் அணியாகவும் சரத்பாபு ஓர் அணியாகவும் பிரிந்து, அவர்களுக்குள்ளாகவே பல முரண்பாடுகள் இருக்கின்றன. கட்சி நிர்வாகிகளை என்.ஜி.ஓ-வில் வேலை வாங்குவதுபோலவே மூன்று மாநிலச் செயலாளர்களும் நடத்துகின்றனர். இதனால், கட்சித் தொண்டர்கள் மேலும் சோர்ந்துபோயிருக்கிறார்கள். தலைவர் இந்த மாத மத்தியில் தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவர் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே இந்தப் பிரச்னைகள் ஓயும்” என்கிறார்கள்.
இந்த விஷயங்கள் குறித்து, கட்சியின் மாநிலச் செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு) செந்தில் ஆறுமுகத்திடம் பேசினோம்.
“எங்கள் கட்சியில் நீங்கள் சொன்னது போன்ற பிரச்னைகள் எதுவும் இல்லை. கட்சியை வழிநடத்துவதற்கு பல்வேறு யுக்திகளைக் கையாளுகிறோம். விவாதங்கள் நடத்துகிறோம். கருத்து வேறுபாடுகள் இருப்பதுபோல வெளியில் தெரியலாம். ஆனால், அப்படி எதுவும் இல்லை. நீங்கள் எங்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளரிடம் பேசிக்கொள்ளுங்கள்” என்றார்.
கட்சியின் செய்தித் தொடர்பாளர், முரளி அப்பாஸிடம் பேசினோம்.
“எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கிடையில் கருத்துரீதியான மாறுபாடுகள் இருந்து ஆரோக்கியமான விவாதங்கள் இருந்திருக்கலாம். ஆனால், பெரிய மோதல், சண்டை, சலசலப்பு அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நேற்று முன்தினம்கூட அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகள் கூட்டம் ஜூமில் நடந்தது. சில பதவிகளின் அதிகார வரைமுறைகளை சரிசெய்யச் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்” என்கிறார் அவர்.