மங்களூரு:”மங்களூரின் மளலியில் கோவில் இருந்தது உண்மை. தற்போதும் கடவுள் சக்தி உள்ளது,” என கேரளாவின் பிரபல ஜோதிடர் கோபாலகிருஷ்ண பணிக்கர் வெற்றிலைகளை பார்த்து கணித்தார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரின், மளலி என்ற பகுதியில் ஜும்மா மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி மறுசீரமைப்பு பணியின் போது, கோவில் போன்ற தோற்றம் இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, உண்மையிலேயே கோவில் தானா என்பது குறித்து, மசூதி அருகில் உள்ள ராமாஞ்சநேயா பஜனா மந்திரத்தில் நேற்று தாம்பூலம் கேள்வி கேட்கும் நடைமுறை நடந்தது.
இதற்காக விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் உட்பட பல்வேறு ஹிந்து அமைப்பினர் அங்கு குவிந்தனர். முன்னெச்சரிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பித்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.கேரளாவின் பிரபல ஜோதிடர் கோபாலகிருஷ்ண பணிக்கர், காய்ந்த வெற்றிலைகள் பார்த்து கணித்து சொன்னார்.
அவர் கணித்து கூறியதாவது:மசூதி இருந்த பகுதியில் இதற்கு முன், கோவில் இருந்தது. அங்கு சிவனை ஆராதனை செய்திருக்கலாம். தகராறில் கோவில் நாசமானது. இங்கிருந்தவர்கள் வேறு இடத்துக்கு இடம் மாறியுள்ளனர். ஆனால் கடவுள் சக்தி அந்த இடத்தை விட்டு செல்லவில்லை. எந்த இடத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை பரிசோதிக்க வேண்டும்.
அனைவரும் ஒற்றுமையாக இணைந்து சர்ச்சையை தீர்த்துகொள்ள வேண்டும். இல்லை என்றால் பெரிய பிரச்னை ஏற்படும். கடவுள் இருந்த இடம் மேம்பட்டால், இங்கு இருப்பவர்களுக்கும் நல்லது நடக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.மேலும், தான் கணித்தது உண்மை என்பதால், காய்ந்த வெற்றிலைகள் பச்சையாக மாறியது என்றும் கூறினார்.
Advertisement