தமிழகத்திலேயே அதிக அளவிலான பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கிவருவது விருதுநகர் மாவட்டத்தில்தான். சாத்தூர், வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, சிவகாசி உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பட்டாசு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பட்டாசு தொழிலுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைப்பும், உச்ச நீதிமன்றமும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன. பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தத் தடை, சரவெடி பட்டாசுகள் தயாரிப்பதற்கு தடை என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் பட்டாசு தொழிலுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன.
மேலும், பட்டாசு தொழிற்சாலைகளில் அதிக அளவில் வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான பல்வேறு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவ்வப்போது பட்டாசு ஆலைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சாத்தூர், தாயில்பட்டி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தப்படுகிறதா, சரவெடி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறதா, பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், தொழிலாளர் பாதுகாப்பு குறித்தும் பட்டாசு ஆலைகளில் மத்திய ஆய்வு குழுக்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.