புதுடில்லி : பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதாக, மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இதன் வாயிலாக, 1 லிட்டர் பெட்ரோல் விலை, 9.50 ரூபாயும், டீசல் விலை, 7 ரூபாயும் குறைகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.
இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், இவற்றின் விலையும் சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது.இதன் தாக்கத்தால், நம் நாட்டில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டன. இதனால், கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
இதையடுத்து பொருளாதார பாதிப்பை தடுக்கும் வகையிலும், விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவதை குறைக்கவும், பல புதிய அறிவிப்புகளை, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். அதன் விபரம்: கடும் நிதி நெருக்கடிபெரும்பாலான உலக நாடுகள் மிகவும் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளன. கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், உக்ரைன் – ரஷ்யா போரால், பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் விலைவாசி உயர்ந்து, பல்வேறு நாடுகள் கடும் நிதி நெருக்கடியை சந்திக்கின்றன.தற்போது சர்வதேச அளவில் நிலவும் சூழ்நிலையால், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படக் கூடாது என கருதி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.25 மாநிலங்கள்இதன்படி, 1 லிட்டர் பெட்ரோலுக்கான கலால் வரி, 8 ரூபாயும், டீசலுக்கான கலால் வரி, 6 ரூபாயும் குறைக்கப்படுகின்றன. இதன் வாயிலாக, ஒரு லிட்டர் பெட்ரோல், 9.5 ரூபாயும், டீசல், 7 ரூபாயும் குறையும்.பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை, கடந்தாண்டு நவ., 4ல் மத்திய அரசு முறையே, 5 மற்றும் 10 ரூபாய் குறைத்தது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, 25 மாநிலங்கள், ‘வாட்’ எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியை குறைத்தன.
ஆனால், தமிழகம், மஹாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் விலையைக் குறைக்கவில்லை. தற்போது மத்திய அரசின் வழியில், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மாநில அரசுகளும் குறைக்க வேண்டும் ‘காஸ்’ மானியம்’உஜ்வாலா’ திட்டத்தின் கீழ், ஏழை குடும்ப பெண்களின் பெயரில் இலவச சமையல் ‘காஸ்’ இணைப்பு வழங்கப்படுகிறது.
இவ்வாறு நாடு முழுதும் உள்ள ஒன்பது கோடி இணைப்புகளுக்கு, ஆண்டுக்கு, 12 சிலிண்டர்களுக்கு, தலா, 200 ரூபாய் மானியம் வழங்கப்படும். இது நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.இதனால், தற்போது 1,003 ரூபாயாக உள்ள சிலிண்டர் விலை, 803 ரூபாய்க்கு கிடைக்கும்.சர்வதேச அளவில் உரங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துவருகிறது. அதே நேரத்தில் நம் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், 1.05 லட்சம் கோடி ரூபாய் உர மானியம் அறிவிக்கப்பட்டது.
இதைத் தவிர, கூடுதலாக 1.10 லட்சம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.பிளாஸ்டிக் பொருட்களுக்கான மூலப் பொருட்களுக்கான சுங்க வரி குறைக்கப்படுகிறது.இதன் வாயிலாக இந்தப் பொருட்களின் விலை குறையும். அதுபோல, இரும்பு மற்றும் உருக்குக்கான மூலப் பொருட்களின் சுங்க வரி மற்றும் இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது. இதனால், இரும்பு பொருட்களின் விலை குறையும்.இதற்கிடையே சிமென்ட் வினியோகத்தை மேம்படுத்துவதன் வாயிலாக, அதன் விலையைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மக்களே முக்கியம்!
எங்களுக்கு எப்போதும் மக்களின் நலனே முக்கியம். இந்த அறிவிப்பால், பெட்ரோல், டீசல் விலை குறைவதுடன், பல்வேறு துறைகளில் அதன் தாக்கம் இருக்கும். இதனால் மக்களுக்கு ஆறுதல் கிடைப்பதுடன், அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும். சமையல் ‘காஸ்’ மானியத்தால், குடும்ப பட்ஜெட்டின் சுமை குறையும்.நரேந்திர மோடி, பிரதமர்