பெங்களூரு-பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், முறைகேடு நடந்தது உண்மைதான் என்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிறையின் ஏழு ஊழியர்கள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைபட்டுள்ள ரவுடிகள் உட்பட செல்வாக்கு மிக்க கைதிகளுக்கு, ராஜ உபச்சாரம் நடக்கிறது. வி.ஐ.பி., சலுகை அளிக்கப்படுகிறது. போதைப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. சிறை ஊழியர்களுக்கு பணம் கொடுத்து, சிறப்பு வசதிகள் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.கடந்த ஐந்தாறு மாதங்களுக்கு முன், இது தொடர்பான வீடியோ பரவியது. இதை தீவிரமாக கருதிய மாநில அரசு, கூடுதல் டி.ஜி.பி., முருகன் தலைமையில், விசாரணை குழு அமைத்தது. இக்குழுவும் சிறைக்கு நேரில் சென்று, கைதிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தியது. அப்போது முறைகேட்டை உறுதி செய்யும் தகவல்கள் கிடைத்தது.தற்போது விசாரணையை முடித்த குழு, 500 பக்கங்கள் கொண்ட அறிக்கையை, அரசிடம் தாக்கல் செய்தது. அதில், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், முறைகேடு நடந்திருப்பது உண்மைதான் என, விவரிக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய சிறை அதிகாரிகள் இருவர் உட்பட, 10 ஊழியர்கள் மீது, துறை ரீதியில் விசாரணை நடத்த வேண்டும். சிறையை மேம்படுத்த, சில நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிபாரிசு செய்துள்ளது.கூடுதல் டி.ஜி.பி., முருகன் தலைமையிலான அறிக்கை அடிப்படையில், சிறையின் ஏழு ஊழியர்கள் மீது, அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களை மாநிலத்தின், வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றி, நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
Advertisement