தொடர்ந்து பேசியவர், “அப்படி ஒருவேளை மாற்றுச் சான்றிதழில் மாணவரின் தவறுகளைக் குறிப்பிட்டால், ஒட்டுமொத்தமாக அந்த மாணவருடைய வாழ்க்கையை அது பெரிதும் பாதிக்கும். இன்னொரு பள்ளிக்கூடத்தில் அந்த மாணவருக்கு அட்மிஷன் கொடுக்க மாட்டார்கள். உயர்கல்வி வாய்ப்புக் கிடைக்காது, வேலை வாய்ப்புகளும் கிடைக்காது. அந்த மாணவர் பாஸ்போர்ட் அப்ளை செய்வதில் இருந்து எல்லா இடத்திலும் சிக்கல் வரும். ஏனென்றால் இன்றைக்கு எல்லா இடத்திலும் மாற்றுச் சான்றிதழ் கேட்கிறார்கள். இது ஒரு குழந்தையை பழிவாங்கும் செயலாக மாறிவிடும்.
அதிகாரிகள் தரக்கூடிய தகவல்களின் அடிப்படையில்தான், அமைச்சர் இதுபோன்ற அறிவிப்புகளை மேற்கொள்கிறார். அமைச்சர்களுக்கு ஆலோசனை கொடுக்கக்கூடிய அதிகாரிகள் சற்று சமூகப் பார்வையோடு செயல்பட வேண்டும். சாதியக் கட்டமைப்புகள், ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடிய சமூக அமைப்பில் நாம் இருக்கிறோம். மேலும், கொரோனாவால் இரண்டு ஆண்டு காலம் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கிப் போய் கிடந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் அவர்களுடைய பெற்றோர்களுக்கு என்ன வருமானம் இருந்தது என எதைப் பற்றியுமே கவலைப்படாமல், இரண்டு ஆண்டுகள் கழித்து அந்தக் குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு வந்த உடனே நேரடியாக படி என்று தான் சொல்லியிருக்கிறோம். அது எத்தகைய தாக்கத்தை அந்தக் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தும் என்பதையெல்லாம் முழுமையாக விவாதிக்க ஆலோசனை செய்ய வேண்டும்.
மாற்றுச் சான்றிதழில் மாணவரின் தவறுகள் குறிக்கப்படும் எனச் சொன்ன அமைச்சர் அதை மறுபரிசீலனை செய்வது நல்லது. மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடுவது என்பது மாணவர் நலன் சார்ந்தது அல்ல, மாணவரை திருத்தும் முறையும் அல்ல. ‘நோய் நாடி நோய் முதல் நாடி’ என்பதைப் போல, மாணவர்கள் அவ்வாறு உருவாவதற்குக் காரணம், அவர்களின் சூழலைப் புரிந்துகொண்டு அதற்கு தகுந்த ஆலோசனைகளைக் கொடுக்க வேண்டும்” என்றார்.