மாமல்லபுரம்: பக்கிங்காம் கால்வாயில் கழிவுகள் கொட்டப்படுகிறதா, உண்மை நிலை என்ன?

சென்னைக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில் குடியிருப்புகளுக்கு அருகிலேயும், பக்கிங்காம் கால்வாயிலும் குப்பைகள் கொட்டப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது ‘பேரூராட்சி எதற்கு சுங்க வரி வசூலிக்கிறது குப்பைங்கிடங்கைப் பார்வையிடவா?’ என்ற கடுமையான ஒரு கேள்வியை எழுப்பியிருந்தது. இதையடுத்து குப்பை கொட்டப்படுகின்றனவா என்பதை அறிய மாமல்லபுரத்திற்கு சென்று பார்த்தோம்.

மாமல்ல‌புரம் பேரூராட்சியில் 14 வார்டுகள் உள்ளன. 14 வார்டுகளில் உள்ள கடைகள், வீடுகள்,சுற்றுலா தளத்தில் வெளியேறும் மட்கும் குப்பை மட்காத குப்பைகளை மாமல்லபுரத்தில் உள்ள கழிவு மேலாண்மை கூடம் (Resource recovery park ) ஒன்றில் சேகரிக்கின்றனர். அங்கு சேகரிக்கப்படும் கழிவுகள் தரம் பிரிக்கப்படுகின்றன. மட்கும் தன்மையுள்ள கழிவுகள் இயற்கை உரமாக தயாரித்து பயன்படுத்தப்படுகிறது. இறைச்சி கழிவு மூலம் பயோ காஸ் (Bio gas )தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகளிலிருந்து பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறான கழிவு மேலாண்மை ஒப்பந்த முறையில் நடைபெற்று வருகிறது.

கழிவு சுத்திகரிக்கும் இடம்

குப்பைக்கிடங்கில் பிரிக்க முடியாத, மறுசுழற்சி செய்ய முடியாத(legacy waste) குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் குப்பைக்கிடங்கிற்கு அருகிலுள்ள தனஜா லேஅவுட்டில் வசிப்பவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் குப்பைகள் வீடுகளுக்கு அருகில் கொட்டப்படுவதாகவும் அதனால் வாந்தி, அலர்ஜி, மூச்சுத்திணறல் போன்ற உடல் பிரச்னைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தனர். மேலும் குப்பைகள் பக்கிங்காம் கால்வாயில் கொட்டப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர். உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையின்போதுதான் மாமல்லபுரம் பேரூராட்சி எதற்கு சுங்க வரி வசூலிக்கிறது குப்பைங்கிடங்கைப் பார்வையிடவா? (மாமல்லபுரம் சுற்றுலாத்தளத்தை பார்வையிட கார், இருசக்கர வாகனங்களிடம் பேரூராட்சி இரண்டு நுழைவாயில்களில் சுங்க வரி வசூலிப்பது குறிப்பிடத்தக்கது) என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இதுகுறித்து மாமல்லபுரம் பேரூராட்சியில் பணிபுரியும் சுகாதார மேற்பார்வையாளர் தாமோதரனிடம் பேசியபோது, “தனஜா லே-அவுட்டில் நான்கு முதல் ஐந்து வீடுகளே உள்ளன. அவற்றுள் இரண்டு குடும்பங்கள் மட்டுமே தொடர்ந்து வசிக்கின்றனர். மற்றவர்கள் எப்போதாவதுதான் வந்து தங்குவார்கள். ஒரு காலத்தில் அந்த இடம் உப்பளமாக (உப்பு தயாரிக்கும் இடம் ) செயல்பட்டது. அதனால் அங்கு நிலத்தடி நீர் உப்பாகத்தான் வரும். தண்ணீர் பிரச்சனை மற்றும் பக்கத்தில் குப்பைக்கிடங்கு இருப்பதால் தனஜா லேஅவுட்டில் உள்ள நிலங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதில்லை. அதனால் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். குப்பைகள் பக்கிங்காம் கால்வாயில் கொட்டப்பட்டதாகவும் வழக்கு போட்டுள்ளனர். ஆனால் பேரூராட்சியின் குப்பைகள் பக்கிங்காம் கால்வாயில் கொட்டப்படுவதில்லை” என்றார்.

கழிவு சுத்திகரிப்பு

இதுகுறித்து பேரூராட்சியின் செயல் அலுவலர் கணேஷ் பேசும்போது, “2008-லிருந்து சேகரிக்கப்பட்ட பிரிக்க முடியாத,மறுசுழற்சி செய்யப்பட முடியாத குப்பைகள் குப்பைக்கிடங்கில் தேங்கியது. தேங்கிய குப்பைகளை மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் ஒரகடத்திற்கும் சிங்க‌ப்பெருமாள் கோவிலிற்கும் இடையில் உள்ள ஆப்பூரில் அப்புறப்படுத்தியுள்ளோம். அங்கு விரைவில் பயோமைனிங் வசதி கொண்டுவர இருக்கிறோம். இப்பொது குப்பைக்கிடங்கு முறையாக பராமரிக்கப்படுகிறது. பக்கிங்காம் கால்வாய்க்கும் குப்பைக்கிடங்கிற்கும் இடையே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். எந்த காலத்திலும் குப்பைக்கிடங்கில் உள்ள குப்பைகள் கால்வாயில் கொட்டப்படவில்லை” என்றார்.

மாமல்லபுரத்தில் குப்பை கிடங்கிற்கு சென்று பார்த்தபோது அங்கு குப்பையெல்லாம் அப்புறப்படுத்தப்பட்டிருந்தது. பக்கிங்காம் கால்வாயிலும் குப்பைகள் கொட்டப்பட்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை. வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றதால் ஒருவேளை அகற்றப்பட்டிருக்கலாம்.

குப்பை அப்புறப்படுத்தப்பட்ட இடம்

மாமல்லபுரத்திற்கு உள்ளே நுழையும்போது வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா வரும் கார், வேன், டூவீலர்களுக்கு வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரி வசூலிக்கும் பணியை முன்பு தனியார் செய்து வந்தது. தற்போது மாமல்லபுரம் பேரூராட்சியே சுங்க வரியை வசூலிக்கிறது. வார நாட்களில் ஒருநாளைக்கு 12,000 முதல் 15,000 வரை வசூல் ஆவதாகவும், வார இறுதி நாட்களில் 20,000 வசூல் ஆவதாகவும் அங்கு வேலை செய்பவர் தெரிவித்தார்.சுங்கவரியில் வரும் வருமானம் மாமல்லபுரம் பேரூராட்சியின் பணிகளுக்கே செலவிடபடுவதாகவும் சொல்கிறார்கள்.

நீதிமன்றம் சாட்டை எடுத்ததால்தான் மாமல்லபுரம் கொஞ்சம் சுத்தமாகியிருக்கிறது. இது அப்படியே தொடர வேண்டும் என்பதுதான் மாமல்லபுரம் பேரூராட்சி மக்களின் எதிர்பார்ப்பு.

Source link

Leave a Comment

Your email address will not be published.