இதுதொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், “வழக்கமாக 210 நாட்களில் நடத்தவேண்டிய பாடத்தை 168 நாட்களில் நடத்தப்பட்டுள்ளன. வருகைப் பதிவு அவசியமில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்ததால், மாணவர்களும் சரியாக வகுப்புக்கு வரவில்லை. 3 திருப்புதலுக்குப் பதிலாக 2 மட்டுமே நடைபெற்றுள்ளது. மாலை நேரச் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டிருந்தால், படித்த பாடங்களை ரீக்கால் செய்ய வசதியாக இருந்திருக்கும். ஆனால், இவற்றை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே அவசரகதியில் தேர்வை அறிவித்து விட்டது.
அதேபோல, தேர்வு அட்டவணையில் கணினி அறிவியல், உயிர் வேதியியல், சமூக அறிவியல் தேர்வு முடிந்து ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் தேர்வு நடக்கவுள்ளது. இது மாணவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும். சில பிரிவு மாணவர்களுக்குத் தேர்வுக்கு இடையே 10 நாட்களும் இடைவெளி உள்ளது. இதனைத் தேர்வுகள் இயக்ககம் முறையாக நெறி படுத்திருக்கவேண்டும். தேர்வுகளுக்கிடையே இடைவெளி குறைவாக இருப்பது கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கும். இவற்றைக் கவனத்தில் கொண்டு விடைத்திருந்தும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்றார் கலக்கத்துடன்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசும்போது, “பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு துறை சார்பாக எப்போதும் தனிக்கவனம் கொடுக்கப்படும். அதேபோல, தற்போதைய 12-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கூடுதல் கவனம் கொடுத்து, ஆசிரியர்கள் மூலமாகவே தேர்வு பயத்தைப் போக்க, கலந்துரையாடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன்பின், மாணவர்களின் மனநிலையில் மாற்றம் தெரிந்தது. ஒருசில பின் தங்கிய பள்ளிகளை தவிர கிட்டதட்ட எல்லா பள்ளிகளுக்குமே குறிப்பிட்ட காலத்துக்குள் பாடத்திட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. குறிப்பாக கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு 3 மாதங்களாகவே படிப்படியாக தேர்வு எழுதும் முறையை விளக்கி எடுத்துக் கூறினோம். அதேபோல, 2 திருப்புதல் தேர்வையும் பொதுத் தேர்வு போலவேதான் நடத்தினோம். எங்களுக்கு இருந்த காலகட்டத்தில், முழு முயற்சியைப் போட்டுள்ளோம். மேலும், கடினமான பாடங்களுக்குக் கூடுதல் விடுப்பு வழங்கிதான் தேர்வு நடக்கிறது. எனவே நல்ல முடிவு வரும் என்றே எதிர்பார்க்கிறோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நன்றாகப் பயிலும் மற்றும் பின்புலம் உள்ள மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகி இருப்பார்கள். ஆனால், சராசரி மற்றும் அதற்கும் கீழ் உள்ள மாணவர்களுக்கு வழக்கமான தேர்வு பயம் ஒருபக்கம், அவசர கதியில் முடிக்கப்பட்ட பாடத்திட்டம் மறுபக்கம் என மன அழுத்தம் அதிகரித்துள்ளது. இது தேர்ச்சி விகிதத்தில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றே கல்வியாளர்கள் கருத்தாக உள்ளது. மாணவர்களின் நலனையும் கருத்தில் கொள்வது அவசியம் ஆகிறது!