லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15ம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 35 வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
எல்லை பதற்றத்திற்கு இடையே பிரதமர் மோடி லடாக்கிற்கு சென்று வீரர்களை சந்தித்துவந்தார். பின்னர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீனவெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஈ நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, இரு நாட்டு ராணுவமும் எல்லையிலிருந்து படைகளை திரும்பப்பெற்றன. இருப்பினும், அக்டோபர் மாதம் வரை எல்லைப் பதற்றம் நீடிக்கும் என மூத்த ராணுவ அதிகாரிகள் கருதுவதால், வீரர்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில், கிழக்கு லடாக்கில் சீன எல்லை அருகேயுள்ள இந்திய விமானப்படைத் தளத்தில் திடீரென இரவு நேர ஒத்திகை நடத்தப்பட்டது. மிக் 29, சுகோய் 30 எம்.கே.ஐ. ரக போர் விமானங்களையும், அப்பாச்சி மற்றும் சினுக் ரக ஹெலிகாப்டர்களையும் இந்திய வீரர்கள் ஒத்திகையின் போது பயன்படுத்தினர்.
முதற்கட்டமாக, அப்பாச்சி மற்றும் சினுக் ரக ஹெலிகாப்டர்களில் ஒத்திகையில் ஈடுபட்ட வீரர்கள், இருளிலும் தெளிவாக வழியைக் காட்டும் பிரத்யேக கண்ணாடி அணிந்திருந்தனர். நவீன சினுக் வகை கனரக ஹெலிகாப்டர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. போர் பதற்றம் ஏற்பட்டால் இந்த ஹெலிகாப்டரே, LINE OF ACTUAL CONTROL எனப்படும் உண்மையான கட்டுப்பாட்டு எல்லைக்கு ராணுவ வீரர்களை அழைத்துச் செல்லும்.
Also see:
ஹெலிகாப்டர்களை தொடர்ந்து கர்ஜனையுடன் மேலெழுந்த மிக் 29 ரக போர் விமானம் எல்லையை கண்காணித்துவிட்டு திரும்பியது.
வடக்கு லடாக் விமானப்படைத்தளத்தில் உள்ள மிராஜ்-2000, சுகோய் 30 எம்.கே.ஐ. மற்றும் ஜாகுவார் போர் விமானங்கள் லடாக் முதல் அருணாசலப்பிரதேசம் வரையிலான உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் ரோந்து மேற்கொண்டன.
இதே போல, உத்தரகாண்ட்டில் சீன எல்லை அருகே இந்திய விமானப்படை விமானங்களும், ஹெலிகாப்டர்களும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றன. சீனா உடன் போர் சூழல் வந்தாலும் அதற்கு தயாராக உள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.