இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம். “பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தெளிவான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கிய பின்னரும், அதே உச்ச நீதிமன்றம் ஒரு கண்காணிப்புக் குழுவையும் அமைத்து, அவ்வப்போது அணையைப் பார்வையிட்டு கண்காணிக்க, அமைத்திருப்பதே அடிப்படைத் தவறு.
உச்ச நீதிமன்றத்தால் கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்ட பிறகு, முதல் முதலாக அணைப் பகுதிக்கு வருகிறது மத்திய கண்காணிப்புக் குழு. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் குல்ஷன் ராஜ் தலைமையில் வரும் இந்தக் குழுவில், தமிழக விவசாயிகளின் நம்பிக்கைக்கு உகந்த பொறியாளரும், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவருமான சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.
அதுபோல கேரளாவின் சார்பில் கலந்துகொள்ளும் இருவரில் ஒருவரான, நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே.ஜோஸ் தான், பெரியாறு பிரதான அணையிலிருந்து பேபி அணைக்குச் செல்லும் வழியில் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு உத்தரவிட்ட அமர்வின் தலைவர். அதுபோல அங்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் நீர்ப்பாசன நிர்வாகத் தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீசும் உள்ளார். இந்த ஆய்வின் முடிவில் பேபி அணையை பலப்படுத்துவதற்கு இடையூறாக இருக்கும் 23 மரங்களை வெட்டுவதற்கு உத்தரவிடுவார்கள். 40 ஆண்டுக்கால பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவார்கள் என நம்புகிறோம்” என்றார்.