2018-ம் ஆண்டு நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக முல்லை பெரியாறு-மதுரை சிறப்பு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என அப்போதையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து, 2020 டிசம்பர் 4-ம் தேதி இத்திட்டத்துக்கு மதுரையில் வைத்து அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்துக்கு முதலில் ரூ.1,020 கோடி நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் ரூ.1,295.76 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு (அம்ரூத்), ஆசிய வளர்ச்சி வங்கி, மதுரை மாநகராட்சி சேர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளன.
இத்திட்டம் அறிவிக்கப்பட்டு முதலே, தேனி மாவட்ட விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தத் திட்டத்துக்கான இடத்தேர்வு, ஆய்வுப்பணி மற்றும் பூமி பூஜைக்காக லோயர்கேம்ப் பகுதிக்கு வந்த அரசு அதிகாரிகளை திருப்பி அனுப்பினர். அதைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திராட்சை, தென்னை, நெல், மா விவசாய சங்கங்கள், வணிகர் சங்கம், முன்னாள் ராணுவத்தினர் சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம், ஹோட்டல் சங்கங்கள், முடிதிருத்துவோர் சங்கம், மக்கள் மன்றம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், சலவைத் தொழிலாளர்கள் சங்கம் என அனைத்துத் தரப்பினரும் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருந்தாலும், 5 மாவட்ட நீர்த் தேவைக்கான அணையைக் கொண்டிருந்தாலும், தேனி மாவட்டத்தின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வது முல்லை பெரியாறு அணைதான். முல்லை பெரியாறு அணையின் நீரானது சுரங்கப்பாதை வழியாக 4 ராட்சத குழாய்கள் மூலம் மலைப்பாதையில் கொண்டு வரப்பட்டு லோயர்கேம்ப் பகுதியில் உள்ள வைரவன் ஆற்றில் கலந்து தனது பயணத்தைத் தொடங்குகிறது. இடையில் சுருளியாறு, கொட்டக்குடி ஆறுகளுடன் சங்கமித்து இறுதியில் வைகை ஆற்றோடு இணைந்து வைகை அணையில் தேக்கப்படுகிறது.