ஒருவரின் மூச்சுக்காற்றை வைத்து அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறியும் பரிசோதனை முறைக்கு அமெரிக்காவில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மூச்சுக்காற்றின் மாதிரிகளை வைத்து தொற்றை உறுதிசெய்யும் அந்தக் கருவிக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் (FDA) ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏற்கெனவே கோவிட் 19 தொற்றைக் கண்டறிய பல கருவிகள் இருந்தாலும் Covid-19 Breathalyzer எனும் இந்தக் கருவிக்கு தனிச்சிறப்பு உண்டு என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
மூச்சுக்காற்றை வைத்து தொற்றைக் கண்டறியுமாறு உருவாக்கப்பட்ட முதல் கருவி இதுதான். மூச்சுக்காற்றில் உள்ள வாயுக்களின் அளவை வைத்து அதில் கொரோனா வைரஸ் உள்ளதா என்பதைக் கண்டறியும் வகையில் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 தொற்று மட்டுமல்லாமல் மற்ற நோய்களுக்கும் இதுபோன்ற சோதனை கருவிகளை வடிவமைக்க இந்தக் கருவி முன்மாதிரியாக அமையும் என்ற கருத்தும் உள்ளது.
இந்தக் கருவி குறித்து கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கிரிஸ்டினா டேவிஸ் கூறுகையில்,”இந்தத் தொழில்நுட்பம் மூச்சுக்காற்றை வைத்து நோய்களைக் கண்டறிவதற்கு உறுதுணையாக அமையும். இது நிச்சயமாக ஒரு மைல்கல்லாகும்” என்கிறார்.