கன்னியாகுமரி பகுதியில் பள்ளிவாசலை நிர்வகிப்பது தொடர்பாக இரண்டு தரப்பினரிடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக கன்னியாகுமரி காவல் நிலையத்தில் சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், பள்ளிவாசலை தற்போது நிர்வகித்து வரும் தரப்பினர் நேற்று ரம்ஜான் பண்டிகை தொழுகை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தியுள்ளனர். நேற்று அரபு நாடுகளில் ரம்ஜான் தொழுகை நடந்ததன் அடிப்படையில் இந்த பள்ளிவாசலிலும் நேற்று தொழுகை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, மற்றொரு தரப்பினர் இன்று ரம்ஜான் பண்டிகை விளையாட்டுபோட்டிகள் நடத்தவுள்ளதாக நேற்று அறிவித்துள்ளனர். இதனால் பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக இரண்டு தரப்பையும் கன்னியாகுமரி காவல்நிலையத்துக்கு போலீஸார் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.
இதையடுத்து இரு தரப்பிலிருந்தும் சுமார் 50 பேர் நேற்று இரவு கன்னியாகுமரி காவல் நிலையத்துக்குச் சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில், வெளியில் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால், அனைவரும் டி.எஸ்.பி அலுவலகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தும்படி போலீஸார் கூறியுள்ளனர். ஆனால் வெளியே வந்த இருதரப்பினரும் காவல்நிலைய வாசலிலேயே மோதலில் ஈடுபட்டனர். இரண்டு தரப்பினரும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.