பா.ஜ., தேசிய நிர்வாகிகள் கூட்டம், அக்கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில், 20 – 21ம் தேதிகளில், ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெறஉள்ளது.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த ஆண்டு பிற்பாதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.காங்., கட்சியை பலப்படுத்துவதற்காக, ‘புதிய சபதம் எடுப்போம்’ என்ற கோஷத்துடன், 13, 14 மற்றும் 15ம் தேதிகளில், இம்மாநிலத்தில் உள்ள உதய்பூரில் நிர்வாகிகள் கூட்டம் நடக்க உள்ளது.
இந்நிலையில் பா.ஜ., சார்பிலும் தேசிய நிர்வாகி கள் கூட்டம் ராஜஸ்தானில் நடக்க உள்ளது.இது குறித்து பா.ஜ., தேசிய செயலர் அருண் சிங், அனைத்து மாநில தலைவர்கள், பொதுச் செயலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில், 20 – 21ம் தேதிகளில் தேசிய மாநாடு நடக்க உள்ளது. இதில், அனைத்து மாநில தலைவர்கள், பொறுப்பாளர்கள், பொதுச் செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, அவரவர் மாநிலங்களில் மேற்கொண்ட பணிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
முதல் நாள் ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திரமோடி, ‘வீடியோகான்பரன்ஸ்’ வாயிலாக உரையாற்றவுள்ளார். அடுத்தநாள் பொதுச் செயலர்கள் மட்டும் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறஉள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:ஒவ்வொரு மாநிலத்திலும், அமைப்பு ரீதியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த முழுமையான அறிக்கையுடன் வந்து சேருமாறு, மாநிலத் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இருப்பினும், கூட்டத்தின் நோக்கம் மற்றும் ஆலோசிக்கப்படஉள்ள முக்கிய விஷயங்கள் எவை என்பது குறித்த தகவல்கள், நிர்வாகிகள் மற்றும் மாநிலத் தலைவர்களுக்கு விரைவில் தெரிவிக்கப்படும்.
இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்த தேர்தல்களை எதிர்கொள்வது குறித்த முக்கிய ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்., தலைவர்கள் ஆய்வு
ராஜஸ்தானின் உதய்பூர் நகரில், வரும் 13 – 15 நாட்களில் நடக்கும் காங்., மாநாட்டிற்கான ஏற்பாடுகளை, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், அஜய் மாகன், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் பார்வையிட்டனர். காங்.,கின் 400 மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ள இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.