அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் கைதாகி, ஜாமீனில் இருக்கும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இப்போதெல்லாம் ரொம்ப கவனமாக இருக்கிறார். “யார் வம்புக்கும் போறதில்லை… தும்புக்கும் போறதில்லை… சிவனேன்னு இருக்கேன்…” என்று சொல்லிக்கொண்டிருந்தவர்மீது மீண்டும் புகார் வந்திருக்கிறது. அமைச்சராக இருந்தபோது அவர் அரசு வேலை வாங்கித்தருவதாக, எத்தனை பேரிடம், எத்தனை லட்சம் பணம் வாங்கினார் என்று பெரிய பட்டியல் போட்டு, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மோசடிப் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர்.
புகார் கொடுத்தவர் இடைத்தரகர் என்பதால், 2 கோடி ரூபாய் மோசடிக்கான சில ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறார். மேலிடத்திலிருந்து கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டதால், ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர் சுதாகரன், உதவியாளரின் மனைவி தேவிஸ்ரீ ஆகியோர் மீதான இந்த மோசடிப் புகார் தொடர்பான கூடுதல் ஆதாரங்களைச் சேகரித்துவருகிறார்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார்.
பெண்கள் உரிமையை நிலைநாட்டுவதற்காக ‘ஆணை’யிடும் அதிகாரத்துடன் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுங்கட்சிப் பெண்மணி, அகங்காரமாக நடந்துகொள்கிறாராம். தமிழ்நாடு முழுவதும் ஆய்வுக் கூட்டம் நடத்திவரும் அவர், தன் பதவிக்குரிய மாண்புடன் நடந்துகொள்வதில்லையாம். வாயைத் திறந்தாலே, கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்களைச் சகட்டுமேனிக்குத் திட்டுகிறாராம். சமீபத்தில் மேற்கே ஓர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றவர், அதில் கலந்துகொண்ட பெண் மேயரையும், மண்டலத் தலைவர்களையும் ஒருமையில் பேசி, மோசமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். “இவரை வைத்துக்கொண்டு மகளிருக்கு என்ன கிடைக்கச் செய்யப்போகிறது இந்த அரசு?” என்று ஆளுங்கட்சிப் பெண்களே ஓப்பனாக கமென்ட் அடிக்கிறார்கள்.
மதுரை மேயர் இந்திராணி அறையில், அவரின் கணவர் பொன் வசந்த் கட்சியினருடன் அமர்ந்து ‘மக்கள் பணி’ செய்கிறார். மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது, ஒப்பந்தங்களை முடிவு செய்வது என்று வரம்பு மீறிச் செயல்படுகிறாராம். அவர் இப்படி ஆக்டிங் மேயராகச் செயல்படுவதை ஊடகத்தினர் படம்பிடித்துவிடுவார்கள் என்ற பயத்தில்தான், கடந்த 11-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தன்று அறைக்குள் நுழைந்த ஊடகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்கிறார்கள்.
‘இந்திராணி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதே கட்சியில் பலருக்குப் பிடிக்கவில்லை. இவ்வளவு அதிருப்திக்கு மத்தியில் இந்த ஆட்டம் தேவையா?’ என்று கேட்கிறார்கள் மேயருக்கு எதிரான தி.மு.க நிர்வாகிகள். மேயர் கணவரின் அட்ராசிட்டிகள் அனைத்தையும் முதல்வர் மற்றும் உதயநிதிக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள் அவர்கள், ‘விரைவில் மதுரை மேயர் மாற்றப்படுவார்’ என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.