தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள இடங்களில் திமுக 3, அதிமுக 2, காங்கிரஸ் 1 இடத்தில் போட்டியிட உள்ளன. திமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில்,
அதிமுக சார்பில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இரண்டு பதவிகளுக்கு 50-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, தமிழ்மகன் உசேன், கோகுல இந்திரா, வளர்மதி என்று பல சீனியர்கள் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றனர். இதனால் நேற்றைய கூட்டத்தில் பெரிய களேபரமே நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஓ.பி.எஸ் நேற்று அமைதியோ.. அமைதியாக இருக்க,
இ.பி.எஸ் மட்டுமே அதிகம் பேசினாராம். “அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோரை ராஜ்யசபா வேட்பாளர்களாக அறிவிக்க உள்ளோம்” என்று கூறினார்களாம்.
இதன் காரணமாக ரேஸில் உள்ள மற்றவர்கள் கடுப்பாகியுள்ளனர். இதற்கு கோகுல இந்திரா, ஜே.சி.டி.பிரபாகர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தாதாகக் கூறப்படுகிறது. ‘எல்லா பதவிகளையும் மாஜிகளுக்குத்தான் கொடுக்கணுமா… இப்ப அந்த ரெண்டு பேரை அறிவிச்சாலும்,
அடுத்து சட்டசபைத் தேர்தல் காலகட்டத்துல இதைத் திருப்பி ராஜினாமா பண்ணவேண்டிய சூழ்நிலை வரும். எதுக்கு ரெண்டு வருஷத்தை வீண் பண்றீங்க. தென் மாவட்டங்களைப் பத்தி யோசிச்சே பார்க்கறது இல்லை.
மேற்குலயும் வடக்குலயும் மட்டும் கட்சி வளர்ந்தா போதுமா?’ என்று கொதித்துள்ளனர். ஆனால், தலைமையிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லையாம். ஒருகட்டத்தில் கோகுல இந்திரா கோபித்துக்கொண்டு வெளியேறிவிட்டாராம். தலைமையின் முடிவுக்கு நாலாபுறமும் எதிர்ப்புகள் எழ, இ.பி.எஸ் திணறிவிட்டாராம்.
ஓ.பி.எஸ் ஆரம்பத்திலிருந்தே வாயே திறக்கவில்லையாம். இது குறித்துக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக-வினர் கூறுகையில், “ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மீது அதிக ரெய்டு நடத்தப்படுகிறதாம்.
அதைக் காரணம் காட்டி, பாதுகாப்புக்காக ராஜ்ய சபா எம்.பி பதவியைக் கொடுக்க முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறார்கள். அவர்கள் பாதுகாப்பைப் பற்றி யோசிப்பதைவிட, கட்சி நலனைப் பற்றி யோசிப்பதுதான் முக்கியம்.
இப்படியே சென்றால் கட்சி மேலும் பல பின்னடைவுகளைச் சந்திக்கும் என்று சொல்லி வந்துவிட்டோம்’ என்றனர். இத்தனை களேபரங்களுக்குப் பிறகும், தலைமை தங்களது முடிவை மாற்றவில்லையாம். திட்டமிட்டபடி தங்களது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடவுள்ளனர் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.