‘ராணுவ வீரர் பழனியின் கடைசி போன் கால்…’ – மனைவி உருக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி தொண்டி வீரசிங்கமடம் அருகேயுள்ள கடுக்கழூரைச் சேர்ந்தவர் விவசாயி காளிமுத்து. அவரது மகன் பழனி (40). இவர் தனது 18 வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது அவர் ஹவில்தார் அந்தஸ்தில் இந்திய – சீன எல்லையான லடாக் கல்வார் பகுதியில் பணிபுரிந்துவந்தார்.

அவரது மனைவி வானதிதேவி. தனியார் கல்லூரி ஊழியர். மகன் பிரசன்னா (10), மகள் திவ்யா(8). மனைவியின் தந்தை ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியில் வசிப்பதால், ராமநாதபுரம் அருகேயுள்ள கழுகூரணி கஜினிநகரில் பழனி நிலம் வாங்கி வீடு கட்டினார். கடந்த ஜனவரியில் வீட்டு நிலைப்படி வைக்க வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், திங்கள்கிழமை (ஜூன் 15) இரவு இந்திய – சீன எல்லையில் உள்ள கல்பார் எனும் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே நிகழ்ந்த மோதலில் பழனி பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

அவரது உடல் லே எனும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராஜஸ்தானில் ராணுவ வீரராக உள்ள அவரது சகோதரர் இதயக்கனி மூலம் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Also see:

அவரது வீரமரணம் குறித்து கழுகூரணி பகுதியில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பழனியின் மனைவி வானதிதேவி கதறி அழுத நிலையில், பழனி வீரமரணம் குறித்து அறிந்த அவரது உறவினர்கள், நண்பர்கள் கழுகூரணியில் உள்ள வானதியைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பழனி குறித்து அழுகொண்டே பேசிய அவரது மனைவி, ‘ஜூன் 3ம் தேதி பழனிக்கு பிறந்தநாள். அன்றுதான் புது வீட்டிக்கு பால் காய்ச்சினோம். அப்போது என்னுடன் பேசினார். ஜூன் 6ம் தேதி எங்களது திருமணநாளாகும். அன்றும் என்னுடன் பேசினார். அவர் தனது பணியை ஓராண்டில் நிறைவு செய்துவிட்டு ஊர் திரும்பி புதிய வீட்டில் வசிக்கலாம் எனக் கூறியிருந்த நிலையில், சீன ராணுவத்தாக்குதலில் வீரமரணம் அடைந்திருப்பது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

சீன ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த பழனியின் சகோதரர் இதயக்கனி. ராஜஸ்தானில் ராணுவ வீரராக உள்ளார். அவருக்கு திருமணமாகவில்லை. பழனிக்கு ஒரு சகோதரி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவ வீரர் பழனியின் சடலம் ஓரிரு நாளில் புதுதில்லியில் இருந்து திருவாடானை பகுதியில் உள்ள அவரது பிறந்த ஊரான கடுக்கழூருக்கு கொண்டு செல்லப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Also read: வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்துக்கு 20 லட்சம் நிதி: அரசு வேலை – முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

Leave a Comment

Your email address will not be published.