ராம் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் மோகன்லால் – ஜீத்து ஜோசப்
25 மே, 2022 – 13:52 IST
தமிழில் சிவா – அஜித் கூட்டணி போல, மலையாளத்தில் ஜீத்து ஜோசப் மோகன்லால் கூட்டணி பிரிக்க முடியாத வலுவான கூட்டணியாக அமைந்துவிட்டது. திரிஷ்யம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் 7 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்தது ராம் என்கிற படத்திற்காகத்தான். ஆனால் வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டிய அந்த படம் கொரோனா தாக்கம் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கேரளாவுக்குள்ளேயே படப்பிடிப்பு நடத்தும் விதமாக திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து அதையும் வெற்றி படமாக்கினார் ஜீத்து ஜோசப்.
மீண்டும் கொரோனா சூழல் சரியாகாத நிலையில் மோகன்லாலை வைத்து மீண்டும் டுவல்த் மேன் என்கிற படத்தை ஒரே லொகேஷனில் படமாக்கி சமீபத்தில் வெளியிட்டார் ஜீத்து ஜோசப். இந்த படம் ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது இதைத்தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ராம் திரைப்படத்தை விரைவில் துவங்க இருப்பதாக சமீபத்தில் கூறினார் ஜீத்து ஜோசப்.
மேலும் இன்னொரு பேட்டியில் ஜீத்து ஜோசப் கூறும்போது ராம் படத்தை முடித்த பின்பு, இரண்டு படங்களை இயக்குவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் அதில் மோகன்லால் நடிக்கும் படம் ஒன்று என்றும் கூறியுள்ளார். இவர்களது கூட்டணி அடுத்தடுத்த படங்களில் தொடர்வதற்கு ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்..