உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் விழா கடந்த 13ஆம் தேதி தொடங்கி இன்று ஐந்தாம் நாள் வரதர் யாளி வாகனத்தில் எழுந்தருளினார். வீதி உலா செல்லப் புறப்பட்ட போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி வடகலை, தென்கலை பிரிவினர் பாசுரங்களை பாடும் போது பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
நீதிமன்ற உத்தரவை பின்பற்றி முதலில் தென்கலை பிரிவினர் ஸ்ரீ சைலேச பாத்ரத்தில் இருந்து இரு வரிகளை பாடினர். பின்னர் வடகலை பிரிவினர் ஸ்ரீ ராமானுஜ தயாபாத்ரத்தில் இருந்து இரு வரிகளை பாடினர். இதனைத் தொடர்ந்து இருவரும் பிரபந்தங்களை சேர்ந்து பாட முற்படும்போது, திவ்ய பிரபந்தத்தின் பல்லாண்டு பாடல்களை நாங்கள்தான் பாடுவோம் என தென்கலை பிரிவினர் அடம் பிடித்தனர்.
இரண்டு பிரிவினரும் சேர்ந்து திவ்யபிரபந்த பாடலை பாடவேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதை ஏற்றுக்கொள்ளாமல் திவ்விய பாடல்கள் பாடுவதை தென்கலை பிரிவினர் புறக்கணித்தனர்.
இதனால் அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்த காவல்துறையினரும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகளும் முயற்சித்தனர். அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
சுவாமி வீதி உலா
Must Read : வீடுகளுக்காக நரிக்குறவர் இன மக்களிடம் பண வசூல் – ஒப்பந்ததாரர் மீது பகீர் புகார்
இதனால் யாளி வாகனத்தில் பெருமாள் வீதியுலா செல்வது காலதாமதமானது. வரதரை காண வெகு நேரம் காத்துக் கொண்டிருந்த பக்தர்கள் வேதனை அடைந்தனர். முன்னதாக தென்கலை பிரிவினர் மணவாள மாமுனிகளை வாழ்த்தி பாடினர். பின்னர் வடகலை பிரிவினர் வேதாந்த தேசிகரை வாழ்த்தி பாடினர்.
செய்தியாளர் – சந்திரசேகர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.