புதுச்சேரி-‘சிறு வணிகர்களுக்கு ஆதரவாக பெரு வணிகம் இருக்கலாமே தவிர, சிறு வணிகத்தை முடக்கிவிட்டு பெருவணிகத்தைப் பாதுகாக்க முடியாது’ என, கவர்னர் பேசினார்.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் 39வது வணிகர் தின விழா மாநாடு ஏ.எப்.டி மைதானத்தில் நேற்று நடந்தது. மாநாட்டை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி கவர்னர் தமிழிசை பேசியதாவது:புதுச்சேரி அனைவருக்கும் தாய் மடியாக உள்ளது. தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி நடந்தபோது பாரதியார் இங்கு வந்து சுதந்திர போராட்டத்தை நடத்தினார். அதேபோல், இந்தியாவில் அடக்குமுறை இருப்பதாக கூறி அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்தார். வாஞ்சிநாதன் இங்குதான் பயிற்சி எடுத்தார்.எளிய மக்களுக்கு பணிபுரிபவர்கள் சிறு வணிகர்களே. ஆகையால், வணிகர்களை புதுச்சேரி என்றும் தாங்கிப் பிடிக்கும். அதில், எந்த சந்தேகமும் இல்லை. அந்நிய முதலீட்டு வர்த்தகம் இந்தியாவுக்கு வராமல் இருப்பதில் பிரதமர் மோடியின் முக்கிய பங்கு உள்ளது. இல்லை என்றால் இந்தியா என்றோ அந்நிய முதலீடு வர்த்தகமயமாகியிருக்கும்.குடும்ப மருத்துவர் இருப்பது போல தெருவுக்கு ஒரு சிறு வணிகர் இருப்பது அவசியம். சிறு வணிகர்களுக்கு ஆதரவாக பெரு வணிகம் இருக்கலாமே தவிர, சிறு வணிகத்தை முடக்கிவிட்டு பெருவணிகத்தைப் பாதுகாக்க முடியாது.கொரோனா காலத்தில் கடையடைப்புத் தேவைபடும்போதும், சிறு வணிகர்களை பாதிக்காத வகையில்தான் புதுச்சேரியில் ஊரடங்கு போடப்பட்டது.இவ்வாறு கவர்னர் பேசினார்.விழாவில், சபாநாயகர் செல்வம், வெங்கடேசன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு வணிகப் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Advertisement