அகழி அமைப்பு கொண்ட அற்புதமான தேர் வடிவ கோயில் இது. வெற்றியின் நினைவாக எழுப்பப்படும் ஜயத விமானம் இங்குள்ளது. விமானத்தின் கீழ் நாட்டிய கரணங்கள் 108, ராமாயண காட்சிகள், ஆடல் மங்கையர் சிற்பங்களும் அருமையானவை. நவகிரகங்களுக்கு நடுவில் நந்தி இருப்பது இங்கு மட்டுமே. இங்குள்ள துர்கை தனி விஷேசம் கொண்டவள் எனலாம். அப்பப்பா…என்னவொரு அழகு, என்னவொரு கம்பீரம் இந்த துர்கைக்கு! திருப்புள்ளமங்கை, திருநாகேச்சுரம், பட்டீஸ்ரம் இந்த 3 தலங்களிலும் உள்ள துர்கைகளும் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவள் என்றும், ஒரே காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டவள் என்றும் கூறுகிறார்கள்.
கருங்கல்லில், பிரகாசமாக, எருமை மீது நின்று கொண்டு மகிஷாசுர மர்த்தினியாக காட்சி தருகிறாள் துர்கை. சூலம், கேடயம், அங்குசம், சங்கு, சக்கரம், வாள், வில், கதை ஆகிய அஷ்ட ஆயுதங்களை ஏந்தி, இருபுறமும் மானும் சிம்மமும் காணப்படுகின்றன. இது ஒரு அபூர்வ குறியீடு என்கிறார்கள் ஆய்வாளர்கள். கீழே இரு வீரர்கள் அரிகண்டமும், நவகண்டமும் அளிக்கும் சிற்பம் நம்மை அதிர வைக்கிறது. அங்கு நடந்த தியாக நிகழ்ச்சியை இவை குறிக்கின்றன.