புதுச்சேரியில் 2011ம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. சுப்ரீம் கோர்ட் தலையிட்டதை தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானது.வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் அறிவிப்பை வாபஸ் பெற அனுமதித்து, முரண்பாடுகளை களைந்து, ஐந்து நாட்களில் புதிய அறிவிப்பு வெளியிட, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி புதிதாக வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில், பிற்படுத்தப்பட் டோர் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்டிருந்த ஒதுக்கீட்டை அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சிவா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். , உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு கோர்ட் அறிவுறுத்தியதை தொடர்ந்து, வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
மனுவில் எழுப்பிய பிரச்னை தொடர்பான எந்த வழக்கும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை எனக் கூறி, உயர் நீதிமன்றத்தை மீண்டும் அணுக, உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா, மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் கமிஷன் கருதுகிறது. இது, அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். எனவே, புதுச்சேரியில், உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க, தடை விதிக்க வேண்டும். இட ஒதுக்கீட்டை வாபஸ் பெற்ற உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்’ என கூறியிருந்தார்.
இம்மனு, கடந்த 5ம் தேதி நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆனந்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தபோது, தற்போதைய நிலை தொடர உத்தரவிட்டு, விசாரணையை, ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பொறுப்புகளை கவனிக்க ஏழு அதிகாரிகளை மாநில தேர்தல் ஆணையம் நியமித்து, பணிகளை வேகப்படுத்தி உள்ளது.இதில், ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குனர் யஷ்வந்தையாவுக்கு ஓட்டுப்பதிவு மெஷின் மேலாண்மை, ஓட்டு எண்ணிக்கை பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு துறை இணை பதிவாளர் ராகினி, கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள், மருத்துவக் கழிவு மேலாண்மை, மாநில தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வித் துறை சார்பு செயலர் ஹிரன், ஊடக கண்காணிப்பு, பயிற்சி மேலாண்மைக்கும், காவல் துறை சிறப்பு அதிகாரி குபேரசிவக்குமரன், உள்ளாட்சி தேர்தல் மேற்பார்வையாளர், பிற மாநில மேற்பார்வையாளர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேளாண் துறை முருகேசனுக்கு தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிகள், உள்ளாட்சி தேர்தல் செலவின கண்காணிப்பு பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் கந்தனுக்கு தபால் ஓட்டு, சமூக வலைதளம் கண்காணிப்பு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் துறை தொழில்நுட்ப பிரிவு துணை இயக்குனர் செழியன் பாபுவுக்கு, ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு பணி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது.கோர்ட் தலையீடு காரணமாக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் தற்போது அறிவிக்க முடியாத நிலை உள்ளது.இருப்பினும் தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க மாநில தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
இந்திய தேர்தல் கமிஷன் கடந்த ஜனவரியில் புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்த்து அறிவிப்பு வெளியிட்டது. இதனடிப்படையில், உள்ளாட்சி தேர்தலுக்கு வார்டு வாரியாக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணியை மாநில தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது.