புதுடில்லி,-”உதய்பூரில் நடக்கும் காங்., மாநாடு வெறும் சம்பிரதாய கூட்டமாக இல்லாமல், கட்சியின் எழுச்சிக்கு வித்திடுவதாக இருக்க வேண்டும்,” என, அக்கட்சி தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, உதய்பூரில் வரும் 13 – 15 வரை சிந்தனையாளர் மாநாடு நடக்க உள்ளது. நாடு முழுதும் இருந்து, 400க்கும் மேற்பட்ட காங்., தலைவர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.இது குறித்து நேற்று டில்லியில் நடந்த காங்., செயற்குழு கூட்டத்தில் சோனியா பேசியதாவது:நம் வாழ்க்கையின் அங்கமாக கட்சி உள்ளது.
அனைவரும் கட்சிக்கு முழு விசுவாசமாக இருக்க வேண்டும்.நாம் வீறு கொண்டு முன்னேறி கட்சிக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, நம் முன் உள்ள சவால்களை சமாளிக்க வேண்டும். இதற்குத்தான் சிந்தனையாளர் மாநாடு நடத்தப்படுகிறது. இது, வெறும் சடங்கு, சம்பிரதாய கூட்டமாக நடக்கக் கூடாது. காங்., இயக்கத்தை மறுசீரமைப்பதாக இருக்க வேண்டும். கட்சியின் எழுச்சிக்கு வித்திடுவதாக அமைய வேண்டும்இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement