Saturday, July 2, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்``வெளிச்சத்தை பற்றிப் பேசிவிட்டோம்; இருட்டைப் பற்றியும் பேச வேண்டும்" - திமுக-வை விமர்சித்த அண்ணாமலை

“வெளிச்சத்தை பற்றிப் பேசிவிட்டோம்; இருட்டைப் பற்றியும் பேச வேண்டும்" – திமுக-வை விமர்சித்த அண்ணாமலை

கும்பகோணம், உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே மத்திய அரசின் எட்டு ஆண்டுக்கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் பா.ஜ.க சார்பில் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. `காவியத் தலைவனே, நாளைய முதல்வரே, தமிழகத்தின் தலைப்பு செய்தியே’ என அண்ணாமலையை வரவேற்று பா.ஜ.க-வினர் போஸ்டர் ஒட்டியிருந்தனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு மேடையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மோடி வேடமிட்ட ஒருவர் நடனமாடினார்.

பா.ஜ.க-வின் எட்டு ஆண்டுக்கால சாதனை விளக்க பொதுக்கூட்டம்

இன்னும் ஒரு பாட்டுக்கு மோடியை வரவைக்கலாமா என கலைக்குழுவினர் கேட்க, வேண்டாம் என நிர்வாகிகள் கூறிவிட்டனர். `மேடைக்கு முன்புறம் கூட்டம் முண்டியடித்தால் அண்ணாமலை வருவதற்கு சிரமமாக இருக்கும், தள்ளி நில்லுங்கள்’ என மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு.முருகானந்தம் கூறியதை யாரும் கேட்கவில்லை. `கட்டுப்பாடு என்பதே உங்ககிட்ட இல்லை’ எனக் கடிந்துகொண்டார்.

அண்ணாமலை வரும்போது பெண்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர். `தமிழகத்தின் மோடி’ எனவும் கோஷமிட்டனர். தொடர்ந்து ஆளுயுர மாலை அணிவித்து வீரவாள் கொடுத்தனர். தொடர்ந்து கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், “பா.ஜ.க எட்டு ஆண்டுக்கால சாதனையை விளக்க நாம வந்துள்ளோம். ஆனால் திமுக-வினர் அவர்களின் ஓராண்டு வேதனை குறித்துப் பேச வருவார்கள். ஸ்டாலினைச் சிறந்த, நம்பர் ஒன் முதலமைச்சர் எனப் பேசுவார்கள். பா.ஜ.க எட்டு ஆண்டு ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றுள்ளது.

சாதனை விளக்க பொதுக்கூட்டம்

விவசாயிகள், பெண்கள், பாதுகாப்புப் பணியில் உள்ளவர்கள் என ஒவ்வொருவருவரின் வாழ்க்கையும் மாற்றியுள்ளது. வரும் ஆண்டுகள் இதைவிடச் சிறப்பான ஆட்சி அமையும். மோடியால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் நாட்டை முழுமையடையச் செய்துள்ளன. 67 ஆண்டுக்கால ஆட்சியில் நமது நாட்டில் 5.5 கோடி கழிப்பறைகள் மட்டுமே அரசு கட்டிக் கொடுத்துள்ளது. 2014-ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சுகாதாரத்தையும் சுத்தத்தையும் அடிப்படையாக வைத்துத்தான் நல்ல நாட்டை உருவாக்க முடியும் என்றதுடன், அதற்காக `ஸ்வச் பாரத்’ என்ற திட்டத்தை கொண்டு வந்தார்.

அண்ணாமலை

அதன்படி பாஜக ஆட்சிக்கு வந்த 8 ஆண்டுகளில் 11.23 கோடி கழிவறைகள் நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ளன. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கு மேல் வங்கிக் கணக்கு இல்லாமல் இருந்தனர். அரசின் நிதி திட்டங்கள் நான்கு பேர் கைக்கு மாறிய பிறகே மக்களுக்குக் கிடைத்தது. உதாரணமாக நூறு நாள் வேலைத் திட்டத்தில் ரூ.200 ரூபாய் சம்பளத்துக்கு 20 ரூபாய் கமிஷன் கொடுக்கவேண்டிய சூழல் இருந்தது. இதற்குக் காரணம் வங்கிக் கணக்கு இல்லை என்பதே. ஆனால் தற்போது 45 கோடி வங்கிக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வங்கிக் கணக்கு திட்டத்தைத் தொடங்கும்போது, காங்கிரஸை சேர்ந்த ப.சிதம்பரம், வங்கிக் கணக்கு தொடங்கிவிட்டால், ஒரு மனிதனின் வாழ்க்கை மாறிவிடுமா எனக் கேட்டார். எதிர்க்கட்சியினர் குறை சொன்னார்கள். ஆனால் ரூ. 22 லட்சம் கோடி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட்டே ஆண்டுக்கு 3 லட்சம் கோடிதான். தமிழக பட்ஜெட்டை விட எட்டு மடங்கு அளவுக்கு பல திட்டங்கள் மூலம் நிதி உதவி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஊழல் இல்லாமல், இடைத்தரகர்கள் கமிஷன் பிடுங்காமல், வங்கிகள் மூலம் மோடி அரசு செலுத்தியுள்ளது.

அண்ணாமலை

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிறு, குறு வியாபாரிகள் உள்ளனர். அவர்கள் கந்துவட்டியில் சிக்காமல் இருப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட முத்ரா திட்டம் மூலமாக தமிழ்நாட்டில் மட்டுமே 2 கோடிப் பேர் பயனடைந்துள்ளனர். இதில் 72 சதவிகிதம் பெண்கள். இதன் மூலம் பெண்கள் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் உயர்த்தியுள்ளனர். 2004 முதல் 2014 வரை, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், பல்வேறு கட்சிகள் அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்டு இந்தியாவைப் பிய்த்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். கொள்ளையடிப்பதற்காக ஒரு கூட்டணி, அதைக் கண்காணிக்கவே எம்.பி-க்கள் இருந்தனர். காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள் என யாருக்கும் மரியாதை என்பதே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய திருநாட்டுக்கு மரியாதை கிடைக்கவில்லை.

கும்பகோணத்தில் பா.ஜ.க பொதுக்கூட்டம்

தற்போது எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் மரியாதை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிதருவதே நல்ல அரசு என திருவள்ளுவர் கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் மும்பை, காஷ்மீர் போன்ற இடங்களில் குண்டுவீச்சு அதிக அளவில் இருந்தது. கடந்த 67 ஆண்டுகளாக இந்தியாவுக்கு என தனித்துவமான வெளியுறவுக் கொள்கை இல்லாமல் இருந்துவந்த சூழலில், தற்போது நமக்கென ஒரு கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

இதனால் முதன்முறையாக அமெரிக்காவும் ரஷ்யாவும் இந்தியா சொல்வதைக் கேட்கின்றன. உக்ரைன் – ரஷ்யா போரில், சிக்கித்தவித்த 23 ஆயிரம் இந்தியர்களை மீட்பதற்காக மோடி ஜி இரண்டு நாட்டு அதிபர்களுடன் பேசினார். 114 விமானங்கள் மூலம் அவர்கள் மீட்கப்பட்டு வீடு வரை பத்திரமாகக் கொண்டு சேர்க்கப்பட்டனர். பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்துவருகிறார். கொரோனா காலத்தில் வளர்ந்த நாடுகள்கூடத் தடுமாறின. இந்தியாவைப் பொறுத்தவரை மோடி சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டார். மோடி மட்டும் இல்லாவிட்டால் இந்த கொரோனா நாட்டையும், மக்களையும் காலிசெய்திருக்கும்.

அண்ணாமலை

194 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதே காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் மருந்துகளில் எவ்வளவு கமிஷன் அடிக்கலாம் என்றே பார்த்திருப்பார்கள். திமுக அரசு பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஊழல் செய்துள்ளது. தேசிய மாடலுக்கும், திராவிட மாடலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 194 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால் யாருக்கும் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. தமிழ்நாட்டி ரேஷனில் வழங்கப்படும் பொருள்களில்கூட பிரச்னை. பாஜக எட்டாண்டுக்கால ஆட்சியில் ஓர் அமைச்சர்மீது கூட ஊழல் புகார் கிடையாது.

தமிழ்நாட்டில் ஓராண்டு திமுக ஆட்சியில் நியூட்ரிஷன் கிட், மின்சாரம், சாலை என ஒவ்வொரு விஷயத்திலும் ஊழல் செய்துள்ளனர். இதில் எந்த தைரியத்தில் திமுக தலைவர் திராவிட மாடல் சிறந்தது எனச் சொல்கிறார் எனத் தெரியவில்லை. மோடி ஆட்சியின் வெளிச்சத்தைப் பற்றி நாம் பல விஷயங்களைப் பேசி விட்டோம். அதேபோல இருட்டைப் பற்றியும் நாம் பேச வேண்டும். திமுக-வின் ஓராண்டு ஆட்சி தமிழ்நாட்டைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. திராவிட மாடல் எனப் பொய்யாக ஒரு பெயரைச் சொல்லிக்கொண்டு, இங்குள்ள தலைவர்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். இந்த ஓராண்டில் கோபாலபுரம் அவர்களைச் சுற்றியுள்ள குடும்பங்கள்தான் நிம்மதியாக உள்ளனர். மக்கள் யாரும் நிம்மதியாக இல்லை.

தமிழ்நாட்டில் லாக்கப் டெத் நடக்கிறது. கடந்த ஓர் ஆண்டாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை என்ற வார்த்தை அதிகமாக கேட்கிறது. எங்கு பார்த்தாலும் கொலைச் சம்பவங்கள், கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது தவறு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. அமைச்சர்கள் முதல் அனைத்து நிர்வாகிகளும் தவறு செய்பவர்களை ஊக்கபடுத்துவதே இதற்குக் காரணம். காவல்துறைகளில் கைகளைக் கட்டிவைத்துள்ளனர்.

தமிழ்நாட்டு அமைச்சர்களின் பேச்சுகள் அவர்கள் செய்த பழைய தொழிலை நினைவுப்படுத்துவதாக இருக்கிறது. தமிழ்நாடே தலைகுனியும் அளவுக்கு அவர்களின் பேச்சு இருக்கிறது. சினிமா குடும்பம் என்பதால் முதல்வர் செல்லுமிடமெல்லாம் செட் போட்டு நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படியாக மேஜிக் செய்து மக்களிடம் அரசைக் காட்டிவருகிறார்கள். திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாள்களுக்குள் கும்பகோணத்தை தனி மாவட்டமாக்குவேன் என அறிவித்தார்கள். ஓர் ஆண்டாகிவிட்டது இதுவரை அறிவிக்கவில்லை.

சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தமிழ்நாடு முதல்வர் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவித்தால், மத்திய அரசிடம் பேசி, ரூ.1,000 கோடி நிதி பெற்று கொண்டு வரப்படும். ஆன்மிக மாவட்டமாக மாற்றி, மாடல் மாவட்டமாக மாற்றப்படும். ஆனால் தமிழ்நாடு முதல்வர் அறிவிக்க மாட்டார். பக்கத்திலுள்ள நிலங்களை வாங்கிய பிறகு அதன் மதிப்பு கூடுவதற்காக அறிவித்து, அதில் பணம் சம்பாதிக்கப் பார்ப்பார்கள். திமுக அறிவித்த 517 தேர்தல் அறிக்கை அம்புலிமாமா கதைபோல் உள்ளது.15 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். அவர்கள் நிறைவேற்றிய வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மோடி கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான திட்டங்களை அறிவித்துக் கொண்டிருந்தபோது, முதல்வர் தன் மகன் நடித்த படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். இலங்கையிலிருந்து விரைவில் தமிழ்நாட்டுக்கு சட்டப்படி நியாமாக வரவேண்டியது வரும். 2024-ம் ஆண்டு தேர்தலில் 400 எம்.பி-க்களுடன் ஆட்சி அமைப்போம். அதில் தமிழ்நாட்டிலிருந்து 25 பேரும், அதில் ஒருவர் தஞ்சாவூரிலிருந்து செல்ல வேண்டும். ஐந்து பேர் அமைச்சராக வேண்டும்.

அண்ணாமலை

மேக்கேதாட்டூவில் அணை கட்ட முடியாது. அணையைக் கட்ட விட மாட்டோம். மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய வேண்டும், ஊழல் வெளியே தெரிந்துவிடக் கூடாது, குடும்ப அரசியல் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக செத்த பாம்பை அடிப்பதுபோல் தமிழ்நாட்டில் காவிரியை வைத்து திமுக-வினரும், முதல்வரும் எமோஷனல் அரசியல் செய்கின்றனர். இதுதான் தேசிய மாடலுக்கும், திராவிட மாடலுக்கும் உள்ள வித்தியாசம்” என்றார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments