குறிப்பாக, திருச்சியில் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகள் மற்றும் துரித உணவகங்கள் என 51 கடைகளில் முதற்கட்டமாக சோதனை நடைபெற்றிருக்கிறது. இந்தச் சோதனையில் 43 கிலோ கெட்டுப்போன இறைச்சி கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து ஒன்பது கடைகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 பிரிவு 55-ன் படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அழுகிப்போகும் அளவுக்கு இறைச்சியை வைத்திருந்ததாக இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தமிழகம் முழுக்க கெட்டுப்போன உணவுகள் சம்பந்தமாக ரெய்டு நடந்துவருவது தெரிந்தும், உணவகங்கள் எவ்விதச் சலனமுமின்றி ஃப்ரீசர்களில் கெட்டுப்போன இறைச்சிகளை வைத்திருப்பது அதிரவைத்திருக்கிறது.
இது குறித்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரமேஷ் பாபுவிடம் பேசினோம். “உணவகங்களில் மீதமாகும் இறைச்சியைக் கண்டிப்பாக ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. ஆய்வின்போது அப்படியான கெட்டுப்போன இறைச்சியோ, உணவுப்பொருள்களோ இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஷவர்மாவைப் பொறுத்தவரை சிக்கனின் எலும்பில்லாத கறியை, ஷவர்மா மெஷினில் கூம்பு போன்ற வடிவத்தில் நிற்கவைக்கிறார்கள். அதற்காக, அந்த சிக்கனின் மேல் முட்டையைப் பூசுகிறார்கள். இப்படி முட்டை பூசப்பட்ட சிக்கனை, ஃபீரிசரில் வைக்கும்போது அதில் பாக்டீரியாக்கள் எளிதில் பரவும் அபாயம் ஏற்படும். அதைச் சாப்பிடும்போது உடலுக்குக் கடும் பாதிப்புகள் ஏற்படும். பெரும்பாலான உணவகங்கள் சமைத்த அல்லது சமைக்காத எந்த உணவுப்பொருளாக இருந்தாலும் முறையாக ஃப்ரிட்ஜில் வைத்து ஃப்ரீஸ் செய்வதில்லை. 10 கிலோ சமைக்கிற இடத்துல 20 கிலோவைச் சமைக்கிறாங்க. மிச்சமானதை ஃப்ரிட்ஜ்லவெக்கிறாங்க. சமைத்த உணவை ஃப்ரீசரில் வைக்காமல், தேவைக்கேற்ப சமைத்து பொதுமக்களுக்குக் கொடுத்தால் பிரச்னையில்லை. ஷவர்மாவைப் பொறுத்தவரை அதில் நிறைய ஃபிளேவர்ஸ் மற்றும் ஸ்பைசஸ் சேர்த்து சமைப்பதால், அது கெட்டுப்போயிருந்தாலும் மக்களுக்குத் தெரிவதில்லை. எனவே, மக்களுக்குக் கொடுக்கும் உணவில் மிகுந்த கவனத்துடன் உணவகங்கள் செயல்பட வேண்டும்” என்றார்.