தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100வது நாளான மே 22-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிய மக்கள் பேரணியில் திடீரென கலவரம் ஏற்பட்டது. போலீஸார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலை சீல் வைத்து மூடப்பட்டது. இருப்பினும் ஆலையை மீண்டும் திறந்திட அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது.
இருப்பினும் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என ஆலைக்கு ஆதரவாவும், ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது என ஆலைக்கு எதிராகவும் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் மனு அளித்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது. இருப்பினும் ஆலைக்கு எதிர்ப்புகள் வலுத்துக்கொண்டே இருந்தன. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் காப்பர் ஸ்மெல்டர் காம்பளக்ஸ், சல்பியூரிக் தொழிற்சாலை, காப்பர் ரிபைனரி, தொடர்ச்சியான காப்பர் ராட் பிளாண்ட், பாஸ்பரிக் ஆசிட் பிளாண்ட், ஆர்.ஓ யூனிட்டுகள், ஸ்டெர்லைல் குடியிருப்புகள் உள்ளிட்ட 10 பகுதிகளை விற்பனை செய்வதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது.