Saturday, June 18, 2022
Homeசினிமா செய்திகள்ஸ்பை த்ரில்லர்தான்... ஆனால் ஆக்ஷன் இல்லை, ரியாக்ஷன் மட்டுமே! #TheCourier படம் எப்படி?

ஸ்பை த்ரில்லர்தான்… ஆனால் ஆக்ஷன் இல்லை, ரியாக்ஷன் மட்டுமே! #TheCourier படம் எப்படி?

ஸ்பை த்ரில்லர் படங்கள் என்றாலே நமக்கு ஜேம்ஸ் பாண்டு பாணி ஆக்ஷன் படங்களே நினைவுக்கு வரும். ஆனால், நிஜ சம்பவங்களை, நிஜ வரலாற்றைப் பிரதிபலிக்கும் டாம் ஹாங்ஸ் வகையறா ஸ்பை த்ரில்லர் படங்களில் ஆக்ஷன் இல்லாவிட்டாலும் அடுத்து என்ன என்ற த்ரில் இருந்துகொண்டே இருக்கும். அப்படியொரு ஜானரில் ‘ஷெர்லாக்’, ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்’ புகழ் பெனடிக்ட் கம்பர்பேட்ச் (Benedict Cumberbatch) நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘தி கூரியர்’ (The Courier) படம் எப்படி இருக்கிறது?

The Courier

1960-களில் ரஷ்யாவும் அமெரிக்காவும் பனிப்போரில் முறுக்கிக்கொண்டிருந்த சமயம், அணு ஆயுதப்போர் மூண்டுவிடும் என்ற அச்சம் நிலவுகிறது. அப்போது ஐக்கிய ராஜ்ஜியத்தின் MI6 என்ற உளவு அமைப்புக்கும், அமெரிக்காவின் சிஐஏ-வுக்கும் உதவ முன்வருகிறார் பிரிட்டிஷைச் சேர்ந்த பிசினஸ்மேன் க்ரெவில் வின் (Greville Wynne). இது தொடர்பாக ரஷ்யாவில் கர்னலாக இருக்கும் ஒலெக் பென்கோவ்ஸ்கியிடம் (Oleg Penkovsky) வியாபார ரீதியாகத் தொடர்பில் இருப்பதாய் காட்டிக்கொண்டு அவர் மூலம் ரஷ்யாவின் ராணுவ ரகசியங்களை வெளியே கொண்டுவருகிறார். கர்ணலும் வின்னும் பூமியில் அமைதி நிலவ வேண்டும், அணு ஆயுதப் போர் வெடித்துவிடக்கூடாது என்ற எண்ணத்துடனே இதைச் செய்கின்றனர்.

இதில் அவர்கள் இருவரும் சந்தித்த பிரச்னைகள் என்னென்ன, இறுதியில் அவர்களுக்கு என்னவானது என்பதைச் சொல்லுமே படமே ‘தி கூரியர்’. நிஜ வரலாற்றுச் சம்பவமான ‘கியூபா ஏவுகணை நெருக்கடி’யை மையப்படுத்தி அதன் பின்னணி கதையாக இது விரிகிறது.

The Courier

க்ரெவில் வின்னாக பெனடிக்ட் கம்பர்பேட்ச். கேப்பே விடாமல் வேகமாக வசனங்களை உதிர்க்கும் அந்த வழக்கமான துருதுரு பெனடிக்ட்டுக்கு லீவு கொடுத்து அனுப்பிவிட்டுப் பொறுப்புள்ள நடுத்தர வர்க்க குடும்பத் தலைவன், பிசினஸ்மேன் என யதார்த்தமாக தன் பாத்திரத்தைக் கையாண்டுள்ளார். மனைவியிடம் கூட உண்மையைப் பகிர்ந்துகொள்ள முடியாத சூழலில், தான் செய்வது சரிதான், இது இந்த உலகின் அமைதிக்காகத்தான் என்று ஏற்றுக்கொண்டு தெளிவுடன் செயல்படும் கதாபாத்திரமாகப் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்.

‘தி இமிடேஷன் கேம்’ உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே வெளிப்பட்ட அவர் நடிப்பின் இன்னொரு பரிமாணம் இதிலும் வெளிப்பட்டிருக்கிறது. க்ளைமாக்ஸில் உடம்பை உறுக்கி, அம்மணமாக நின்று பதைபதைக்க வைக்கும் காட்சிகளில் தன் சிறந்த பங்களிப்பை அளித்திருக்கிறார். விரக்தியில் இருட்டுச் சிறையில் கையில் கிடைத்ததைத் தூக்கி வீசி அழும் காட்சிகளில் கோபமும் ஆற்றாமையும் வெளிப்படுகிறது. அதே சமயம், மனைவியை ஆறு மாதங்களுக்குப் பிறகு சிறையில் சந்திக்கும் காட்சியில் பாசிட்டிவ்வாக பேசும் அவரின் வசனங்கள் அன்பின் வெளிப்பாடு.

The Courier

படத்தின் மற்றொரு ஹீரோ ரஷ்ய கர்னலாக வரும் மெரப் நினிட்ஸே (Merab Ninidze). நாட்டிற்குத் துரோகம் செய்தாலும் உலக அமைதிக்காகத்தான் செய்கிறோம் என்று அவர் செய்யும் காரியங்கள் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கின்றன. அதில் இருக்கும் குழப்ப மனநிலை, அந்த நடுக்கம், அதே சமயம் இது சரி என்ற இறுமாப்பு என எல்லாவித உணர்வுகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். நண்பனைக் காட்டிக்கொடுத்துவிட்டோம் என்ற குற்றவுணர்வில் அவர் இருக்கையில், அந்த இருட்டு அறையில் அவருக்கும் அவரின் நண்பருக்கும் இடையில் விரியும் அந்தக் காட்சிதான் படத்தின் ஆன்மா! அதில் பெரும்பாலும் அமைதியாகவே இருந்து நம் இதயத்தைக் கணக்க வைத்திருக்கிறார்.

சிஐஏ அதிகாரியாக வரும் ரேச்சல் ப்ராஸ்நஹன் (Rachel Brosnahan) மற்றும் விண்ணின் மனைவியாக வரும் ஜெஸ்ஸி பக்லி (Jessie Buckley) இருவரும் தங்களின் பங்களிப்பைச் சிறப்பாகக் கொடுத்திருக்கின்றனர். எதுவானாலும் தன்னை நம்பிவந்த விண் உயிருடன் நாடு திரும்பவேண்டும் எனப் போராடும் காட்சியில் ரேச்சல் நம் மனதில் நிற்கிறார். விண்ணின் மனைவியாக வரும் ஜெஸ்ஸிக்கு தன் கணவர் ஓர் உளவாளியாகச் செயல்பட்டு சோவியத் யூனியனில் மாட்டிக்கொண்டார் எனத் தெரிந்ததும், அதுவரை அவருக்கு யாருடனோ தொடர்பு இருந்ததாய் நினைத்ததை எண்ணி வருந்துவதும், பின்னர் அதற்காக மகிழ்ச்சியடைவதும் அத்தனை யதார்த்தம்.

The Courier

இரு நாடுகளுக்கிடையே இருந்த பதற்றமான அரசியல் உறவைச் சீண்டாமல், அந்த அரசியல் பின்னணியை இரண்டு நண்பர்களின் வாயிலாகவே கடத்த முற்பட்டிருக்கிறார் இயக்குநர் டொமினிக் குக் (Dominic Cooke). இவர் மேடை நாடகங்களை இயக்குவதில் பெயர்போனவர் என்பதாலோ என்னவோ, படத்தில் ஏகப்பட்ட வசனங்கள். திரைப்படம் என்பதை ஒரு விசுவல் மீடியமாக அணுகி, பக்கம் பக்கமாகப் பேசும் வசனங்களை ஒரு சில ஷாட்களின் ஆழத்திலேயே சொல்லிவிடும் இயக்குநர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படியான பாதையைத் தேர்ந்தெடுக்காமல் ஸ்டூடியோவில் செட்களில் எடுக்கப்பட்ட குறைந்த பட்ஜெட் படமாக, வசனங்களில் மட்டுமே கதையை நகர்த்துவது சற்றே சறுக்கல்.

வசனங்களில் ஆங்காங்கே வெளிப்படும் நகைச்சுவை மட்டும் படத்தின் இறுக்கமான சூழலிலும் நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. சியன் பாப்பிட்டின் ஒளிப்பதிவு, செட் என்றாலும் இரண்டு நாடுகளுக்குமான வித்தியாசத்தைத் தெளிவாகக் காட்டியிருக்கிறது. ஆனால், பின்னணி இசை ஒரு ஸ்பை த்ரில்லருக்கான பதற்றத்தை இன்னமும் கூட்டியிருக்கலாம்.

The Courier

ஸ்பை த்ரில்லர் என்றான பின், அந்த உளவு குறித்த சங்கேத மொழிகள், அதன் பின்னணி போன்றவற்றுக்கு மெனக்கொடாமல் இருந்தது படத்தின் நம்பகத்தன்மையைக் குறைக்கிறது. அதே சமயம் துவக்கத்தில் இவர்கள் மாட்டுவார்களா இல்லையா என்பதை மட்டுமே படத்தின் அடிநாதமாகக் கொண்டு காய்நகர்த்தி இறுதியில் சோவியத் சிறையில் ஒரு உளவாளி படும் சித்ரவதை எப்படியானது தெரியுமா என்று டிராக்கை மாற்றியிருப்பது ஒரு குறிக்கோளற்ற திரைக்கதைக்கான சான்றாகவே தெரிகிறது.

ஆனாலும், தேர்ந்த நடிப்பு, அடுத்து என்ன என்று எழும் சஸ்பென்ஸ், நிஜ வரலாற்றைத் தெரிந்துகொள்ள உதவும் படம் போன்றவற்றுக்காக ‘தி கூரியர்’-ன் சேவைக்கு மார்க்குகளை அள்ளி வழங்கலாம்!

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments