1017-ம் ஆண்டு, சித்திரை திருவாதிரை நன்னாளில் ஸ்ரீபெரும்புதூரில் ஆசூரி கேசவசோமயாஜி – காந்திமதி தம்பதியருக்கு ஸ்ரீஆதிசேஷனின் அம்சமாக, திருமாலவன் அருளால், ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் மாமா பெரிய திருமலைநம்பி. அந்தக் குழந்தைக்கு ராமாநுஜன் என்றும், லக்ஷ்மணனின் பெயரான இளையாழ்வார் என்றும் பெயர் சூட்டினார். அந்தக் குழந்தையே வைஷ்ணவத்தின் மாபெரும் ஞானியாக, 1000 ஆண்டுகளுக்கு முன்பே சாதி ஏற்றத்தாழ்வுகளை புரட்டித் தள்ளிய மாபெரும் புரட்சியாளராக உருவெடுத்தது.
சிறுவயது முதலே ஸ்ரீராமாநுஜரின் வைஷ்ணவப் பற்றும் பக்தியும் தீவிரமாக வளர்ந்தன. காஞ்சி வரதராஜரின் சந்நிதியில் துறவறம் மேற்கொண்டார். யதிராஜர் என்ற பட்டப் பெயரும் பெற்றார். வரதராஜ பெருமாளின் கட்டளைப்படியே ஒவ்வொரு செயலையும் செய்தும் வந்தார்.
காஞ்சியில் இருந்து திருவரங்கத்துக்குப் புறப்பட்ட ராமாநுஜர், திருவரங்கப் பெருமானின் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பூஜா கிரமங்களை ஒழுங்குபடுத்தினார். திவ்வியபிரபந்த பாராயணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். தத்துவப் பிரிவுகளில் முக்கியமான வேதாந்தத்தில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக இவரே விளங்கினார். பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் எழுதினார். ஆண்டாளின் மீதும் அவர் இயற்றிய பாசுரங்களின் மீதும் பற்றும் பக்தியும் கொண்டார். அதனால் திருவாய்மொழியின் செவிலித்தாய், திருப்பாவை ஜீயர் என்றெல்லாம் போற்றப்பட்டார்.
ஆசார்யர்களில் ஆதிசங்கரர், ஸ்ரீராமாநுஜர், மத்வர் ஆகிய மூவருமே முதலாமானவர்கள் என்று போற்றப்படுகிறார்கள். மேலும் திருவரங்க ரங்கநாத பெருமானே ‘உடையவர்’ என்று போற்றிய மாபெரும் ஞானியும் இவர். பாரத தேசம் எங்கும் எழுந்தருளி நமது தர்மங்களையும் திருமடங்களையும் நிறுவிய அருளாளர். மேலும் அப்போது ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த உழைக்கும் மக்களை ‘திருக்குலத்தார்’ என்று தம்மோடு சேர்த்துக்கொண்டு சமயப் புரட்சி செய்த அருளாளரும் இவரே.
வடமொழியிலும், தமிழிலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர்களைக் கொண்டு வேத உபநிஷத்துக்கள் குறித்தும், பிரபந்தம் குறித்தும் ஆராய்ச்சிகள் நடத்தினார். அதன்வழியே பல உன்னதக் கருத்துக்களை எளிமையாக்கி மக்களிடம் கொண்டு சேர்த்தார். அற்புதமான பல ஆன்மிக நூலகளுக்கும் பாஷ்யங்களும் செய்தருளினார். கீதைக்கு அவர் செய்த பாஷ்யங்கள் அற்புதமானவை. வைணவ வழிபாடுகள் நீடித்து வளரவும், திருமாலின் பெருமை தேசம் எங்கும் பரவவும் அயராது பாடுபட்டவர் இந்த மகாபுருஷர். நாராயண சேவைக்கென 75 தலைவர்களை நியமித்தார். ஆலயங்களை சீர்படுத்தினார். எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாது எங்கும் எப்போதும் எட்டெழுத்து திருமந்திரத்தை பரப்பி வந்தார்.
அந்த எட்டெழுத்தினை இவர் கற்றுக்கொண்ட விதமும் அதை மக்களிடம் இவர் கொண்டு சேர்த்த விதமும்தான் இவரை கருணையாளராக உலகுக்கு எடுத்துக் காட்டியது. ஆம், திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் நாராயண மந்திரோபதேசம் பெற பலமுறை நடையாய் நடந்தார் ராமாநுஜர். இறுதியில் ஒருவழியாக நம்பிகள் அவருக்கு மந்திரோபதேசத்தை திருக்கோஷ்டியூர் நாராயண பெருமாள் கோயில் கோபுர மாடத்தில் வைத்து ஓதினார். யாருக்கும் கிட்டாத, மோட்சம் தரும் அந்த மந்திர உபதேசத்தை யாருக்கும் சொல்லக் கூடாது என்றும், மீறினால் உனக்கு நரகமே கிடைக்கும் என்றும் எச்சரித்தார். ஆனால், ராமாநுஜரோ எல்லோரையும் அங்கிருந்தே அழைத்து உலகத்தை உய்ய வைக்கும் திருமந்திரமான அஷ்டாட்சர மந்திரத்தை பலரும் கேட்க ஓங்கி ‘ஓம் நமோ நாராயணாய’ என்று உபதேசித்தார்.
அதுகேட்ட திருக்கோஷ்டியூர் நம்பி ராமாநுஜரிடம், “உனக்கு நரகம் கிடைக்கும் என்று தெரிந்தும், இப்படிச் செய்தாயே, இது உனக்கு நல்லது அல்ல” என்று கோபித்தார். அதற்கு ராமாநுஜர், “சுவாமி, நான் நரகத்துக்குப் போனாலும் பரவாயில்லை, உபதேசம் பெற்ற அத்தனை பேரும் ஸ்ரீமன் நாராயணன் பாதம் அடைவார்களே, அதுவே எனக்குப் போதும்” என்றார். அதுகேட்டு கலங்கிய திருக்கோஷ்டியூர் நம்பி ‘நீரே எம்பெருமானார்’ என்று கலங்கி ஆசீர்வதித்துக் கொண்டாடினார்.
இதுதான் பக்தி. மக்கள் மீது கொண்ட அன்பே முக்கியமானது. மற்றபடி சடங்குகள், வழிபாடுகள் எல்லாம் பிற்பாடுதான் என்று வாழ்ந்தவர் இந்த மகான்! அதனாலேயே எல்லோருடைய அன்புக்கும் காரணமாக விளங்குகிறார் இந்த மகாஞானி. அனுஜன் என்றால் உடன்பிறந்தவர் என்று அர்த்தம், ராமனோடு பிறந்த லட்சுமணன்தானே, ராமாநுஜராகவும் அவதரித்தார். அவர் திருஅவதாரம் செய்த சித்திரை திருவாதிரை நாள் மே 5. இந்நாளில் அவரை வணங்கி நலன்கள் யாவும் பெறுவோம்.