வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடத்தப்பட்டது போலி ‘என்கவுன்டர்’ என விசாரணை ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.
2019 நவம்பரில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நால்வரும் சம்பவ இடத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது நான்கு பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். ‘தப்பிச் செல்ல முயன்றதால், சுட்டுக் கொல்லப்பட்டனர்’ என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த என்கவுன்ட்டர் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சிர்புர்கர் தலைமையில் நீதிபதி ரேகா சொந்தூர் பல்டோடா, சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய விசாரணை கமிஷன் அதே ஆண்டு டிசம்பரில் அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கமிஷனின் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘நான்கு இளைஞர்களையும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே போலீசார் அங்கு அழைத்துச் சென்றனர். எனவே போலி என்கவுன்டர் நடத்திய 10 போலீசார் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என பரிந்துரைக்கப்பட்டது. தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, இந்த அறிக்கையை ஆய்வு செய்த பின், வழக்கை தெலுங்கானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
Advertisement